கைகொடுக்கும் சேவா இன்டர்நேஷனல்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்யாவசிய உணவு பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், நுவரெலியா, கண்டி, பதுல்லா, மட்டாரா, காலே, மன்னார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தேயிலை எஸ்டேட்டுகளில் பணியாற்றும் தமிழ்க் குடும்பத்தினரும் சிங்களர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் முதல், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்தால் ஊக்கம் பெற்ற சர்வதேச தொண்டு அமைப்பான, சேவா இன்டர்நேஷனல், உணவு, மருந்து பொருள்களை வழங்கி வருகிறது. இதன் முதல் கட்டமாக, நோட்டன் பிரிட்ஜ், வட்டவலை, புளியாவத்தை, கிணிகத்தேனை, பத்தனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 ஆயிரம் குடும்பங்களுக்கு, ஒரு மாதத்திற்கு தேவையான 25 கிலோ அரிசி, 25 கிலோ மாவு ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், நுவரெலியா, கண்டி, ரத்னபுரா, மன்னார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் குடும்பங்களை அந்த அமைப்பின் தன்னார்வலர்கள் அடையாளம் கண்டு வருகின்றனர். அவர்களுக்கு கடந்த ஏப்ரல் முதல் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கணவரை இழந்து பெண்களை மட்டுமே நம்பியுள்ள குடும்பங்களுக்கு, ஆறுமுக நாவலர் அறக்கட்டளையுடன் இணைந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என அந்த அமைப்பின் நிர்வாகி விஜயபாலன் தெரிவித்தார்.