விமான படைக்கு எச்ஏஎல் தயாரித்த இரட்டை இருக்கைகள் கொண்ட முதல் தேஜஸ் பயிற்சி விமானம் ஒப்படைப்பு

இரட்டை இருக்கைகள் கொண்ட முதல் இலகு ரக போர் விமானம் தேஜஸ், விமானப் படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) ‘தேஜஸ்’ என்ற இலகு ரக போர் விமானத்தை தயாரிக்கிறது. ஒற்றை இருக்கை கொண்ட தேஜஸ் போர் விமானம் விமானப் படையில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து பயிற்சிக்காக இரட்டை இருக்கைகள் கொண்ட 18 தேஜஸ் விமானங்களை தயாரிக்க எச்ஏஎல் நிறுவனத்திடம் விமானப்படை ஆர்டர் கொடுத்தது. அதன்படி விமானத்தை தயாரித்து, விமானப் படையிடம், எச்ஏஎல் நிறுவனம் நேற்று ஒப்படைத்தது. இந்த விமானத்தை எச்ஏஎல் தலைமை நிர்வாக இயக்குனர் அனந்தகிருஷ்ணனிடம் இருந்து, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுத்திரி நேற்று பெற்றுக் கொண்டார்.
பெங்களூருவில் நடந்த இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் பங்கேற்றார். இதில் இரட்டை இருக்கைகள் கொண்ட தேஜஸ் விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விமானம் குறித்து எச்ஏஎல் நிறுவனம் கூறியதாவது:
இரட்டை இருக்கைகள் கொண்ட தேஜஸ் போர் விமானம் இலகு ரகத்தை சேர்ந்தது. இது அனைத்து காலநிலையிலும் இயங்கக் கூடிய 4.5 தலைமுறை விமானம். இதில் நவீன போர் விமானங்களில் உள்ள அட்வான்ஸ்ட் கிளாஸ் காக்பிட், டிஜிட்டல் ஏவியானிக்ஸ் கருவிகள் உள்பட பல வசதிகள் உள்ளன. மேலும் இரட்டை இருக்கைகள் கொண்ட போர் விமானங்கள் தயாரிக்கும் ஒரு சில நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. எனவே, இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். இந்த விமான தயாரிப்பு, மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு மேலும் சிறப்பை சேர்த்துள்ளது. பைலட்டுகளுக்கு பயிற்சிஅளிக்கும் நோக்கத்தில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டுக்குள் இரட்டை இருக்கைகள் கொண்ட 8 விமானங்கள் விமானப் படையிடம் ஒப்படைக்கப்படும். 2026-27-ம் ஆண்டுக்குள் மீதி விமானங்கள் ஒப்படைக்கப்படும். இவ்வாறு எச்ஏஎல் நிறுவனம் தெரிவித்தது.