பொலிவு பெறும் பஞ்சகோசி பரிக்ரமா

ஹிந்து தர்ம சடங்குகளில் பஞ்சகோசி யாத்திரை ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. காசியின் ஜோதிர்லிங்க வடிவ பரிக்கிரமா பாதை பண்டைய காலங்களிலிருந்து சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்சகோசி யாத்திரையில் பல பக்தர்கள் வெறுங்காலுடன் நடந்து செல்கின்றனர். இந்த பாதையில் காண்ட்வா, பீம்சண்டி, ராமேஷ்வர், பாஞ்சோ பாண்டவ், கபில்தாரா ஆகிய ஐந்து இடங்கள் உள்ளன. வழிநெடுகிலும் 108 முக்கிய கோயில்கள், குளங்கள், 44 தர்மசாலைகள் உள்ளன. யாத்திரையின்போது அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் வலது பக்கத்திலேயே அமைந்துள்ளன என்பது இப்பாதையின் சிறப்பு.

உத்தரபிரதேச அரசு, வாரணாசியில் உள்ள பஞ்சகோசி பரிக்ரமாவை ரூ. 55.93 கோடியில் புதுப்பித்து அழகுபடுத்த திட்டமிட்டுள்ளது.  இது 3 கட்டங்களாக முடிக்கப்படும். இத்திட்டத்தின்படி, 70 கி.மீ தூரம் கொண்ட அனைத்து வழித்தடங்களையும் சர்வதேச தரத்தில் மாற்றியமைக்கும் வகையில் கோயில்கள், குளங்கள், சுற்றுலா தங்குமிடங்கள், சத்திரங்கள் அழகுபடுத்தப்படுகின்றன. இதனால், பக்தர்கள் ஆண்டு முழுவதும் யாத்திரையை எளிதாகவும், வசதியாகவும் மேற்கொள்ள முடியும். இத்திட்டம், பல புதிய வேலை வாய்ப்புகளையும் புதிய வணிக வாய்ப்புகளையும் உருவாக்கும். ஆன்மிக சுற்றுலாவும் மேம்படும்.