இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். 1919-ல், தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டு பாரத மக்களின் ரத்தம் தோய்ந்த அம்மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, கண்ணாடி பாட்டிலில் போட்டு, `பாரத விடுதலையே என் லட்சியம்’ என சத்தியம் செய்தவர் பகத் சிங். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பகத்சிங், சௌரிசௌரா நிகழ்வுக்குப் பிறகு, தன் பாதையை மாற்றினார். நண்பர்களுடன் இணைந்து `இந்தியக் குடியரசு சங்கம்’ எனும் அமைப்பில் ஒருவராக இணைந்தார். பின் `நவஜவான் பாரத் சபை’ என்ற இளைஞர்கள் அமைப்பை உருவாக்கினார்.
சைமன் கமிஷனை எதிர்த்து போராடிய காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் மீது பிரிட்டிஷ் போலீஸார் தடியடி நடத்தியதில் உயிரிழந்தார். இதனால் கோபமடைந்த பகத்சிங் மற்றும் அவரது நண்பர்களான சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர், ஸ்காட்டை கொல்வதற்குப் பதிலாக துணை காவல் மேலதிகாரி சாண்டோஸ் எனும் ஆங்கிலேயரைச் சுட்டுக்கொன்று தலைமறைவாயினர். பின்னர், ஆங்கிலேயர் சட்டங்களை எதிர்த்து குண்டுவீச்சில் ஈடுபட்டனர். சாண்டோஸைக் கொன்றதற்கும், குண்டுவீச்சில் ஈடுபட்டதற்கும் 1931 மார்ச் 23ல் தூக்கிலிடப்பட்டனர்.
தூக்குமேடைக்கு வரும்போது, “அந்த நாளும் கண்டிப்பாக வரும், நாம் சுதந்திரம் அடையும் போது, இந்த மண் நம்முடையதாக இருக்கும், இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்…” என்ற பொருள் கொண்ட தங்களுக்கு விருப்பமான சுதந்திரப் பாடல்களை பாடினர். இவர்களுக்காக மற்ற கைதிகள் அழுதனர், அத்துடன், “தியாகத்தின் ஆசையே எங்கள் இதயத்தில் உள்ளது” என்ற பொருள் கொண்ட பாடலும் சிலர் பாடினர். “இன்குலாப் ஜிந்தாபாத்” என்றும், “ஹிந்துஸ்தான் ஆஜாத் ஹோ” என்ற முழக்கங்கள் எழுந்தன.
பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் பலிதான தினம் இன்று