முன்னாள் தளபதி கருத்து

கார்கில் போரின் போது இந்திய ராணுவத்தை வழிநடத்தி வெற்றி பெற்றுத்தந்தவர் தளபதி வி.பி மாலிக். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “ராணுவம் என்பது தன்னார்வப் படை. அது நலவாரியம் அல்ல. அதில் இருப்பவர்கள் அனைவரும் தேசத்துக்காக போராடும் சிறந்த வீரர்களாகவும் தேசத்தைப் பாதுகாப்பவர்களாகவும் இருக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டு ரயில்கள், பேருந்துகளை எரித்து சேதத்தை ஏற்படுத்துபவர்கள் ராணுவத்தில் சேர தகுதியற்றவர்கள். ராணுவத்தில் ஆள் சேர்ப்புக்கு புதிய நடைமுறையை அறிவித்துள்ளதால் சிலருக்கு வயது வரம்பு மீறியிருக்கலாம். அதனால் அவர்கள் விரக்தியில் இருக்கலாம். அது நியாயமானதே. அதற்கு அரசு உரிய தீர்வு காணும். மேலும் அக்னி வீரர்கள் காவல்துறை, துணை ராணுவத்தில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது. நிறையபேர் தனியார் துறையிலும் வேலையில் சேரலாம். இப்போதே அவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய முடியாது. 4 ஆண்டுகள் சேவைக்குப் பின்னரே வேலைவாய்ப்புகள் உருவாகும். அக்னிபத் திட்டத்தில் நிறைய சாதகமாக விஷயங்கள் உள்ளன. தற்போது இளைஞர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை அரசு கண்டிப்பாக பரிசீலிக்கும். அக்னி பாதை திட்டம் செயல்பாட்டுக்கு வரட்டும். அது நடைமுறைக்கு வந்தபின் சிக்கல்கள் இருந்தால் அதற்கேற்ப அரசு திருத்தங்களை கொண்டுவரும்’ என தெரிவித்தார்.