கற்பும் உண்டோ கட்சிகளுக்கு

‘குடுகுடுப்பைக்காரன் சட்டை’ என்னும் ஒரு சொல்வழக்கைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று தெரியுமா?
ஒட்டுப்போட்ட சட்டை என்பதால் மட்டுமல்ல, ஒட்டுப்போட உதவிய துணிகள் எல்லாம் வெவ்வேறு நிறம், வெவ்வேறு தரம். தமிழகத்தில் தேர்தல் களம் காணும் கூட்டணிகள் எல்லாம் குடுகுடுப்பைக்காரன் சட்டைகள்தான்.மு.க. ஸ்டாலின் தன் கட்சியின் சார்பாக களமிறங்கும் வேட்பாளர் பட்டியலைத் தொலைக்காட்சியில் வாசித்தபோது ஒவ்வொருவர் பெயருடன் அவர்கள் பெற்ற பட்டங்களையும் சொன்னார். சிலர் டாக்டர், சிலர் வக்கீல், சிலர் இன்ஜினீயர், வேறுசிலர் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, படித்தவர்கள். இவர்களுள் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்களும் ஓரிருவர். எல்லாம் சரி, அரசியலில் நுழைந்துவிட்டால் படித்த படிப்பைப் பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் மறந்துவிடுகிறார்கள்.

இவர்கள் எப்படிப் படித்தனர் என்பதை நாம் மறந்துவிடுவோம். படித்த படிப்புக்கும் செய்யும் தொழிலுக்கும் சம்பந்தமில்லை என வைத்துக்கொள்வோம். செய்யும் தொழிலில் ஒழுங்காக இருந்திருக்கிறார்களா எனப் பார்த்தால் அதுவுமில்லை. படிப்புக்கேற்ற பதவிகளும் வழங்கப்பட்டதில்லை. திமுகவின் க. பொன்முடி வரலாற்றுத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழக அரசில் அவர் ஏற்றிருந்த துறை முதலில் நல்வாழ்வு, பிறகு போக்குவரத்து, பிறகு கல்வி. அதிலொன்றும் தவறில்லை. ஐஏஎஸ் அதிகாரிகள் வெவ்வேறு துறைகளுக்கு மாற்றப்படுகிறார்கள்.

அதுபோலத்தான் இதுவென வைத்துக்கொள்ளலாம். ஆனால், கல்வி அறிவு என்பது தான் பெற்ற கல்வியைப் பிறருக்குப் பயன்படுத்துவதாகவும், தொடர்ந்து பலவற்றைக் கற்றுக்கொள்வதாகவும் அமைய வேண்டும். அப்போதுதான் அவர்களால் சமுதாயம் உயரும். இது 16வது சட்டமன்றத் தேர்தல். இதற்கு முன் நடைபெற்ற பதினைந்து சட்டமன்றத் தேர்தல்களில் தேர்வாகி மந்திரிகளாக இருந்த வர்களுள் எத்தனை பேர் பட்டதாரிகள், எத்தனை பேர் பள்ளிப்படிப்பைத் தாண்டா தவர்கள் – இவர்களின் பணி எப்படி இருந்தது?

ஒவ்வொரு சட்டமன்றத்தின்போதும் நிலைமை எப்படி மாறியது?
பதினைந்து சட்டமன்றங்களுள் பங்குபெற்றவர்கள் எந்த அளவுக்கு தமிழ்நாட்டை உயர்த்தினார்கள் எனப் பார்த்தால் இவர்களைமீறி தமிழகம் ஏதோ வளர்ந்திருக்கிறதே ஒழிய, தமிழக வளர்ச்சிக்கு இவர்கள்தான் காரணம் எனச் சொல்லமுடியாது. பதினாறாவது சட்டமன்றம் எப்படி அமையும் என்பதை உறுதியாக சொல்வதற்கில்லை.

ஆட்சிவெறி அரசியலில் கட்சிக் கற்புக்கு இடம் ஏது?
ஐம்பது வருடங்களாகப் பொறுப்பில் இருந்த ஆட்சியாளர்கள் எல்லாருமே தேர்தல் காலத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், ஆத்மசுத்தியுடன் நியாயவான்களாக நடந்து கொண்டிருந்தால், மக்கள் பணத்தில் ஒரு பைசாகூட எடுக்காதவர்களாக இருந்திருந்தால் இன்று தமிழ்நாடு தேசத்தின் முதன்மை மாநிலமாக வளர்ந்திருக்கும். யாரோ, எங்கோ செய்த அரைகுறை ஆய்வுகளின்படி, சோள விளைச்சலில் தமிழ்நாடு முதலிடம். கோணிப்பைகள் உற்பத்தி அதிகம்; இதற்கும் தமிழ்நாடே முதலிடம் என்றெல்லாம் நம்மை நாமே முதுகில் தட்டிக்கொள்வதில் பயனில்லை.

இந்த மாநிலத்தில் மட்டும் எவ்வளவு கறுப்புப்பணம் பிடிபட்டிருக்கிறது! பிடிக்காமல் விடப்பட்ட கறுப்புப்பணம் எவ்வளவு? இன்றைய நிலையில் மோசடி அரசியல்வாதிகளின் லஞ்சப்பணம் எந்தந்த வியாபாரிகளிடம் எந்தந்த தொழிலதிபர்களிடம் புழங்கி வருகிறது என்பதையெல்லாம் உண்மையாகவே கணக்கிட்டால் நாம் வெட்கப்பட வேண்டியிருக்கும். ஆனால், மனசாட்சி உள்ள குடிமக்களோ, சமூக சிந்தனையுள்ள அமைப்பு களோ இதையெல்லாம் தோண்டித் துருவிப் பார்ப்பதில்லை.

அதனால் யாரும் கண்டுகொள்வதில்லையே என்னும் நினைப்பில் கொள்ளையர்கள் தொடர்ந்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை நம் மாநிலத்தில் எத்தனைபேர் மீது ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டன, எத்தனை புகார்கள் விசாரணைக்கு வந்தன, எத்தனை விசாரணைகள் தீர்ப்பில் முடிந்தன, எத்தனை தீர்ப்புகளுள் யார்யார் தண்டனை பெற்றார்கள் என நாம் புள்ளி விவரக் கணக்கு எடுத்ததில்லை. அப்படி எடுத்தால் அந்தப் புள்ளி விவரம் தலைசுற்ற வைக்கும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை யார் யார் மீதோ லஞ்சக் குற்றம் சுமத்தினோமோஅவர்களெல்லாம் இன்று சமூகத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்களே; மீண்டும் மீண்டும் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாகவும், மந்திரிகளாகவும் பதவி வகிக்கிறார்களே என வருந்திப் பயனில்லை. எல்லா மாநிலங்களிலும் இதே கதைதான். ஊழல் செய்யாத கட்சி என ஒன்றோ இரண்டு நாட்டில் இருக்கலாம். வாக்காளர்கள், தேசத்தின் நலனை விரும்பும் கட்சிகளுக்கு வாக்களிக்கலாம்.

-ஆர்.நடராஜன்