கோயிலில் முதல் மரியாதை

சிவகங்கை மாவட்டம் வடவன்பட்டியைச் சேர்ந்த சேதுபதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘சிங்கம்புணரி அடுத்த வடவன்பட்டி சண்டிவீரன் கோயிலில் தனி நபருக்கு ஜாதி அடிப்படையில் முதல் மரியாதை அளிக்கப்படுகிறது. தனி நபருக்கு கோயிலில் முதல் மரியாதை தருவது சட்டத்திற்கு புறம்பானது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்ததை அடுத்து வட்டாட்சியர் முன்நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தனி நபருக்கு முதல் மரியாதை அளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டது. ஆகவே திருவிழாவில், தனி நபர் யாருக்கும் முதல் மரியாதை தரக்கூடாது என உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ‘கோயில்களில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே. மனிதனுக்கு அல்ல. கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்று அரசு தரப்பில் உறுதிப்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டார்.