FCRA திருத்த மசோதாவால் திருச்சபை ஏன் கவலைப்படுகிறது?

நாடாளுமன்றத்தில் Foreign Contribution (Regulation) Act (FCRA) திருத்த மசோதா விவாதிக்கப்படுவதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக, மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு பாரதத்தில் உள்ள கிறிஸ்தவ சபைகளின் பாதிரியார்கள் மற்றும் மதகுருமார்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் இதர சில நீதிமன்றங்கள், தேவாலய சொத்துக்களில் ஏற்படும் நிதி முறைகேடுகளைத் தடுக்கவும், அவற்றை முறைப்படுத்தவும் ஒரு சட்டப்பூர்வ வாரியத்தை உருவாக்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டுள்ளது. மகாராஷ்டிரா போன்ற மாநில அரசுகள் தேவாலயங்கள் மற்றும் மிஷனரிகளுக்குச் சொந்தமான பிரிட்டிஷ் காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலப்பயன்பாடுகள் குறித்து மாநில அளவிலான விரிவான தணிக்கைக்கு (Land Audit) உத்தரவிட்டுள்ளன. மேலும், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பழைய குத்தகை விதிகளை மீறியதாகக் கூறி, சில மிஷனரி நிலங்கள் அரசால் மீட்கப்பட்டுள்ளன.
28.5.2024 அன்று மதுரை கிளை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகவும் முக்கியமானது. நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இது விஷயத்தில் “ஹிந்து கோயில் சொத்துக்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டப்படியும், வஃக்பு வாரியச் சொத்துக்கள், வஃக்பு வாரியச் சட்டப்படியும் பாதுகாக்கப்படுகின்றன. கிறிஸ்தவ ஆலயச் சொத்துக்களைப் பொறுத்தவரை, இதுபோன்ற சட்டம் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. பாரதம் மதச்சார்பற்ற நாடு. அனைத்து மதங்களையும் சமமாக அணுக வேண்டும். இதனால் தேவாலயச் சொத்துக்களைப் பதிவுத்துறைச் சட்டம் 22-ஏ பிரிவின் கீழ் கொண்டு வர வேண்டும். அதற்கான நேரம் வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் சுமார் ரூ.10,500 கோடி, பாரத என்.ஜி.ஓ.க்களுக்கு வருகிறது. மதமாற்றம் செய்வது, நாட்டின் கலாச்சாரத்தை உருக்குலைப்பது மட்டுமே இந்த நிதியின் நோக்கம் என்று கூறப்படுகிறது. உள்துறை அமைச்சகத் தகவல்படி, கன்னியாகுமரியைச் சேர்ந்த Tuticorin Diocesan Association மற்றும் Tuticorin Multipurpose Social Service Society ஆகிய இரண்டும் அதிக அளவில் அமெரிக்கா, ஜரோப்பிய நாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றுள்ளன.
அரசாங்கத்தின் நிலைப்பாட்டின்படி, திருத்தங்களின் நோக்கம் எந்த மதத்தினரின் தொண்டு நடவடிக்கைகளையும் தடுப்பது அல்ல. எந்த காரணங்களுக்காக நிதி பெறப்பட்டதோ, அதற்காக மட்டுமே செலவு செய்யப்படுகிறதா, மதம் மாற்றம் போன்ற தவறான காரணங்களுக்கு போகாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய மட்டுமே! மத்திய அரசிடம் நேர்மையை எதிர்பார்க்கும் கிறிஸ்தவ அமைப்புகள், தாங்கள் நேர்மையாக இருக்கத் தயங்குவது ஏன்? 