ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், பணியாளர் தேர்வு முறைகேடுகளை நிவர்த்தி செய்யக்கோரி, 2026 ஜூலை 25 முதல் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி அன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சட்டமன்றத்தை முற்றுகை செய்த போது, போராட்டம் தீவிரம் அடைந்து காவல் துறையினர் தடியடி நடத்தியதில், போராட்டக்காரர்கள் காயமடைந்தனர்.
மாணவர்கள் மீதான தாக்குதல்கள் தேசிய செய்தியாக மாறவே, மாணவர்களின் கவலைகளை கவனிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை, ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு கொடுத்தது. அதுவரை கண்டு கொள்ளாமல் இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கவனத்தை இந்த விவகாரம் ஈர்த்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் குறைகளை தீர்க்குமாறு முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அவர்கள் வலியுறுத்தினார்கள்.
ஆகஸ்ட் 17 அன்று, ஹேமந்த் சோரன் அரசு மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ஜே.எஸ்.எஸ்.சி – சி.ஜி.எல் (JSSC–−CGL) தேர்வை ரத்து செய்ய முடிவு செய்தது. 2014 முதல் டி.எஸ்.ஆர் டேட்டா ப்ராசசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் நடத்தப்பட்ட தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. அதுமட்டுமல்லால்
டி.டி.பி.எல் நிறுவனத்தை கருப்பு பட்டியலிலும் சேர்த்துள்ளது.
ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (JSSC−-CGL) தேர்வை ரத்து செய்வதாகவும், 2014 முதல் டேட்டா ப்ராசசிங் பிரைவேட் லிமிடெட் (TDPL) நடத்தி வந்த தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு தொடர்பான நடவடிக்கைகளை ரத்து செய்வதாகவும், முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் ஜார்க்கண்ட் அரசு அறிவித்தது.
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமிதாப் கௌசல் தலைமையிலான ஒரு பிரத்யேக சீர்திருத்த குழுவின் மூலம், ஆட்சேர்ப்பு முறையை ஆய்வு செய்யவும் ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில் முறைகேடுகளை தடுப்பதற்கு தேவையான மாற்றங்களை பரிந்துரைக்கும் பொறுப்பை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தேர்வு முறையில் சீர்திருத்தம் செய்யவும், ஆட்சேர்ப்பு நடைமுறையில் அதிக வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது.
மாநில அரசின் குற்றப் புலனாய்வுத்துறை சி.ஐ.டி விசாரணை மற்றும் தேர்வு சீர்திருத்தக் குழு மாணவர்கள் எழுப்பிய சில கவலைகளுக்கு தீர்வு கண்டபோதிலும், சி.பி.ஐ விசாரணை குறித்து கூடுதல் உத்தரவாதத்தை மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாணவர்கள் தங்களது போராட்டதை ஒரு அரசியல் பிரச்சாரமாக அல்லாமல், வேலை தேடுபவர்கள் இயக்கமாகவும் இதை மாற்றி இருந்தனர். தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளை, ஆட்சேர்ப்பில் வெளிப்படைத் தன்மை மற்றும் முறையான வேலை வாய்ப்புகள் ஆகியவை அவர்களது முதன்மை கோரிக்கையாக இருந்து வருகின்றன.
ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டத்துடன் தில்லியில் நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) என்று குறிப்பிடும் குழுவுடன் தொடர்புடைய போராட்டங்கள் ஒப்பிடுகையில் ஜார்க்கண்ட் போராட்டத்தில் “ஆசாதி” (விடுதலை) போன்ற முழக்கங்களோ அல்லது ஹிந்துக்களுக்கு எதிரான கோஷங்கள் எதுவும் எழுப்பப்படவில்லை.
ஆகஸ்ட் 7 அன்று, கம்யூனிச சிந்தனைப் போக்குள்ள அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தேசிய தலைவரான நேஹா போரா, மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், போராட்டத்தில் இணைந்த போது அவரது வருகையை அங்கு குழுமியிருந்த போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தங்களது போராட்டத்திற்கு அரசியல் சாயம் வேண்டாம் என்ற எண்ணத்தை, இதன் மூலம் மாணவர்கள் எடுத்து காண்பித்தனர்.
போராட்டக்காரர்கள் சி.பி.ஐ விசாரணையை தொடர்ந்து கோரி வருகின்றனர். அரசாங்கம் இந்த கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டால், போராட்டம் தீர்வை நோக்கி நகரக்கூடும்
ஜார்க்கண்ட் மாணவர்கள் இயக்கம் ஆட் சேர்ப்பு தேர்வுகள், அரசு வேலைகள் மற்றும் தேர்வு சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதன் மூலம் தனித்து நிற்கிறது. காக்ரோச் ஜனதா பார்ட்டியின் உதவியின்றி, நியாயமான அறவழியில் பணி நியமன முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க ஜார்க்கண்ட் மாணவர்கள் சோரன் அரசை கட்டாயப்படுத்தி வெற்றி கண்டு உள்ளனர்.
– கட்டுரையாளர்: செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : சுபதி கார்த்திக்