செந்தில் பாலாஜி தம்பியை தேடும் அமலாக்கத் துறை

நான்கு முறை, ‘சம்மன்’ அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல், ‘டிமிக்கி’ கொடுத்து வரும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை பிடிக்க முடியாமல், அமலாக்கத் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாகி, சென்னை புழல் சிறையில் உள்ளார். இந்த வழக்கில், மற்றொரு முக்கிய குற்றவாளியான செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள், நான்கு முறை ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்.

அவரது மனைவி மற்றும் மாமியார் ஆகியோருக்கும், ‘சம்மன்’ அனுப்பப்பட்டு உள்ளது; அவர்களும் விசாரணைக்கு ஆஜராகமல், ‘டிமிக்கி’ கொடுத்து வருகின்றனர். இதனால், வழக்கு விசாரணை அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் அசோக்குமார் கைது செய்யப்பட்டார் என, ஆகஸ்டில் தகவல் பரவியது. இதை உடனடியாக மறுத்த அமலாக்கத் துறை அதிகாரிகள், அவர் பதுங்கி இருக்கும் இடத்தை அறிய முடியாமல் திணறி வருகின்றனர். பெயர் குறிப்பிட விரும்பாத அமலாக்கத் துறை அதிகாரி கூறுகையில், ‘நாகா லாந்து அல்லது கேரளாவில் அசோக் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று தேடியபோது கிடைக்கவில்லை. நம்பத்தகுந்த தகவல் கிடைத்தவுடன் சுற்றி வளைக்கப்படுவார்’ என்றனர்.