புனே மாவட்டம் பீமா கோரேகானில் கடந்த 2018 ஜனவரி 1ல் போர் வெற்றி தின பேரணி நடந்தது. அப்போது இருத்தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதற்கு முந்தைய நாள் புனேவில் எல்கர் பரிஷத் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசினர். அதன் விளைவாகவே வன்முறை வெடித்தது என குற்றம்சாட்டப்பட்டது. மேலும் எல்கர் பரிஷத் மாநாடு நடத்தியவர்களுக்கும் மாவோஸ்டுகளுக்கும் தொடர்பு உள்ளது என்றும் கூறப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சமூக ஆர்வலர்கள் சுதா பரத்வாஜ், வரவர ராவ், ஹனி பாபு, ஆனந்த் தெல்டும்டே, வெர்னான் கன்சல்வெஸ், கவுதம் நவ்லகா உள்ளிட்ட பலரை கைது செய்தது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளர் ஸ்டான் சுவாமி சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர்கள் மீது உபா உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பான வரைவு குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், கைது செய்யப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்டு) இயக்கத்தை சேர்ந்தவர்கள். புரட்சி மூலம் மக்கள் ஆட்சியை அமைக்க முயற்சித்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போர் புரிய சதி செய்தனர் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம், மும்பை டாடா கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் இருந்து பயங்கரவாத செயல்களுக்கு மாணவர்களை தேர்வு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.