பாரதத்தில் எல் நினோ விளைவு

பாரதத்தில் சமீப காலமாக பெரும் வறட்சி போன்றவை இல்லை. மாறாக அரசி, பருப்பு, காய்கறிகளை நாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (என்.ஓ.ஏ.ஏ), 2023ம் ஆண்டில் பாரதத்தில் வரும் ஜூன் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் எல் நினோ விளைவு ஏற்பட சுமார் 60 சதவீத வாய்ப்புகள் உள்ளதாக கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இது, ஜூன் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் பாரதத்தின் பருவமழையை மோசமாகப் பாதிக்கும் என தெரிவித்துள்ளது. இதேபோல, எம்கே குளோபல் நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி, கடந்த 20 ஆண்டுகளில் வறட்சி உருவான அனைத்து ஆண்டுகளும் நிகழ்வுகளும் எல் நினோ காலங்களில் மட்டுமே இருந்துள்ளன. அவ்வகையில், இந்த ஆண்டு எல் நினோ ஏற்பட்டால், தன் விளைவாக வறட்சி ஏற்படும், இது விலை ஏற்றங்களுக்கு வழிவகுக்கும், உணவு பணவீக்கத்தை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் ‘எல் நினோ’ மற்றும் ‘லா நினா’ ஆகிய காலநிலை வடிவங்கள் மாறி மாறி வரும். எல் நினோ விளைவு என்பது புவி வெப்பமாதலின் காரணமாகப் புவியின் கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலின் ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவது. இவை இரண்டும் உலகளாவிய காலநிலைகள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை.

குட்டிப் பையன், குட்டிப் பெண்: பசிபிக் கடலில், குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் மேல் பகுதியில் உள்ள வான் பரப்பிலும், வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் தான் எல் நினோ. எல் நினோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் குட்டிப் பையன் என்று பொருள். எல் நினோவுக்கு எதிர்மறையாக இதே கடல் வான் பகுதியில் ஏற்படும் இன்னொரு மாற்றம் லா நினா. அதாவது கடலின் சராசரி வெப்பநிலை சரியும் போது ஏற்படும் விளைவு இது. லா நினா என்பது குட்டிப் பெண். இந்த இரு வெப்ப நிலை மாற்றங்களும், இப்போது தான் ஏற்படும் என்று உறுதியாக சொல்வதற்கு இல்லை. சராசரியாக 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை எல் நினோவும் லா நினாவும் நிகழ்கிறது. இந்த வெப்ப மாற்றம் 9 மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை கூட நீடிக்கும். லா நினாவை விட எல் நினோ தான் அடிக்கடி உருவாகிறது. சர்வதேச அளவில் நேரத்தை கணக்கிட உதவும், டேட் லைன் பகுதிக்கு 120 டிகிரி மேற்கில் பசிபிக் கடலின் இந்த மாற்றங்கள் நிகழும்போதெல்லாம் கடல் பகுதி உட்பட, உலகெங்கும் தரைப் பகுதிகளிலும் வானிலையில் பெரும் மாற்றங்கள் உருவாகின்றன. எல் நினோ உருவாகும்போதெல்லாம் கடுமையான மழையும், தாங்க முடியாத வறட்சியும் என எதிர்மறையான தட்ப வெப்பத்தை பல பகுதிகளில் உருவாக்குகிறது. லா நினா காலத்தில் உலகின் வட மேற்கு பகுதிகளில் குளிர்காலம் தாங்க முடியாத அளவுக்கு குளிருடன் இருக்கும். அதே நேரத்தில் தென் கிழக்கு பகுதிகளில் குளிர் வழக்கத்தைவிட குறையும்

பிப்ரவரி மாதம் எல் நினோவிற்கான வாய்ப்பு 45 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும் என என்.ஓ.ஏ.ஏ கூறிய ஆறு முறைகளில், மூன்று முறை மட்டுமே எல் நினோ உருவானது. மற்ற காலங்களில் பருவமழை இயல்பான அளவுக்கு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.