திராவிடமும் வெங்காயமும்

எழுத்தாளர் சுப்பு எழுதிய திராவிட மாயை புத்தகத்தின் ஆங்கில பதிப்பு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “திராவிடம் என்பது குழப்பம் நிறைந்த ஒன்று. தி.மு.க தொடங்கப்பட்டதே குழப்பத்தில் தான். கடந்த 2 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வந்ததிலிருந்து பார்த்து வருகிறேன். திராவிட ஆட்சி ஒரு கூடாரத்தை போன்று செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்டால் இருபது விதமான பதிலை கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதை அவர் பரிட்சையில் ஒரு கேள்விக்கு ஒரு மாணவனாக எழுதியிருந்தால் மதிப்பெண்ணே பெற்றிருக்க மாட்டார். தி.மு.கவை வீழ்த்துவது மிக எளிது. அது ஒரு வெங்காயம் போல.  வெளியே ஒரு மீடியா மற்றும் ஆங்கில புலமை கொண்ட ஒரு வெளிப்புற லேயர். சுமார் 260 நபர்கள் அதில் உள்ளனர். அதை நாம் பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்து உள்ளே சென்றால் அங்கு அட்டாக் லேயர் (Attack layer) இருக்கும். இவர்களிடம் நாம் அறிவார்ந்து ஏதாவது பேசினால் கெட்ட வார்த்தைகளில் பேசுவார்கள். நம்மை வசைப்பாடி அடக்கப் பார்ப்பார்கள். இந்த அட்டாக் லேயரை மீண்டும் வெங்காயத்தை உரிப்பது போல் உரித்து சென்றால், அங்கு குறுநில மன்னர்கள் லேயர் இருக்கும். இவர்களை முதல் இரண்டு லேயர்களும் எப்போதும் பாதுகாத்து கொண்டு இருக்கும். இவர்கள் வசம் பல ஏரியாக்கள் தலைமுறை தலைமுறையாக பிரித்து கொடுக்கப்பட்டிருக்கும். தற்போதைய ஆட்சியில் திருச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் குறுநில மன்னர்களைபோல் உள்ளார்கள். கே.என்.நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களை திராவிட அரசு பாதுகாப்பாக வைத்துள்ளது. இவர்களுக்கு ஒரு விஷயத்தையும் சுயமாக செய்யும் ஆற்றல் இருக்காது. ஒரு விமானம் பிடித்து டெல்லிக்கு தனியாக சென்று தமிழகத்திற்கு ஒரு ரூபாய்கூட பெற்றுவர இயலாதவர்கள். இந்த லேயரையும் உரித்துக் கொண்டு உள்ளே சென்றால் அங்கு குடும்ப லேயர் இருக்கும். இந்த குடும்ப லேயரிடம்தான் அனைத்து ஆளுமையும் இருக்கும். அதையும் உரித்தால், உள்ளே கோபாலபுரம் லேயர் இருக்கும். முதல் நான்கு லேயர்களையும் உரித்து போட்டு விட்டால், இந்த கோபாலபுரம் லேயரை எளிதில் வீழ்த்தி விடலாம். வெங்காயத்தில் உள்ளே எதுவுமே இல்லை என்பது போல் இந்த கோபாலபுர லேயரில் எந்த சரக்கும் இல்லை.  2024ம் ஆண்டு ஒரு மைல் கல்லாக இருக்கப்போகிறது. அந்த ஆண்டு பாஜகவை நோக்கி மக்கள் வெள்ளம்போல் வரவுள்ளனர். 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் கண்டிப்பாக பா.ஜ.க ஆட்சியமைக்கும். அதை யாரும் தடுக்க முடியாது.” என்றார்.