விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2016ம் ஆண்டு பேசியபோது. 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்றார். பல எதிர்கட்சிகள், பிரிவினைவாதிகள், தேசவிரோத சக்திகள், சார்பு ஊடகங்கள், சில கட்சி சார்புடைய விவசாய அமைப்புகள் எல்லாம் இது முடியாது, நடக்காது என பேசினர், எள்ளி நகையாடினர். இதற்காக மத்திய அரசு கொண்டுவந்த புரட்சிகரமான வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடினர். அரசின் திட்டங்களை குறைகூறினர். இவர்களின் தொடர் மூளை சலவையால் விவசாயிகளே கூட மத்திய அரசின் சீரிய முயற்சிகளை நம்பவில்லை. ஆனால், தற்போது மத்திய அரசு சொன்னதை சொன்னபடி சாதித்துக் காட்டியுள்ளது.

விவசாயிகள் சராசரி வருமானம் சம்பந்தமாக பாரத ஸ்டேட் வங்கி நடத்தப்பட்ட நாடு முழுவதுமான ஒரு ஆய்வில் கடந்த 2018 நிதியாண்டு மற்றும் நிகழும் நிதியாண்டுக்கு இடப்பட்ட காலகட்டத்தில் விவசாயிகளின் சராசரி வருமானம் 1.3 முதல் 1.7 மடங்கு வரை வளர்ச்சியடைந்துள்ளது. இது, சில சமயங்களில் இரண்டு மடங்குக்கும் அதிகமாகக்கூட உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த எஸ்.பி.ஐ வங்கிக் கிளைகளில் இருந்து கோதுமை, பருத்தி, நிலக்கடலை, சோயாபீன், கரும்பு, பருத்தி மற்றும் நெல் போன்ற பயிர்களின் நுண்ணிய தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகள் விவசாயம் அல்லாத வருமானத்தில் சராசரியாக 1.4-1.8 மடங்கு அதிகரித்துள்ளனர். பணப்பயிர் அல்லாத விவசாயிகளை விட பணப்பயிர்களை பயிரிட்டவர்கள் அதிக வருமானம் ஈட்டியுள்ளனர். பயிர்களைத் தவிர விவசாயிகளின் வருமான ஆதாரம் பெருகிய முறையில் வேறுபட்டதாக 77வது தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி இது உறுதிப்படுத்துகிறது. கர்நாடகாவில், பருத்தி விவசாயிகளின் சராசரி ஆண்டு வருமானம் 2018ம் நிதியாண்டில் ரூ. 2.67 லட்சத்தில் இருந்து 2022ம் நிதியாண்டில் ரூ. 5.63 லட்சமாக இரட்டிப்பாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 5 ஆண்டுகளில் சோயாபீன் விவசாயிகள் தங்களின் வருமானத்தை 2 மடங்கு அதிகரித்துள்ளனர்.

சந்தையுடன் இணைக்கப்பட்ட விலையுடன் கூடிய குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி), 2014 முதல் 1.5 முதல் 2.3 மடங்கு வரை அதிகரித்துள்ளது. இது, விவசாயிகளுக்கு சிறந்த விலையை உறுதி செய்வதிலும் உகந்த விலை கண்டுபிடிப்புக்கும் வழிவகுக்கிறது. பல பயிர் வகைகளுக்கு ‘தள விலை அளவுகோல்’ நிர்ணயித்தல் (இன்றைய தேதியில் 23), மேலும் சிறந்த மகசூல்/மதிப்பு உள்ள பயிர் வகைகளுக்கு படிப்படியாக செல்ல விவசாயிகளை ஊக்குவிக்கிறது. விவசாயத் துறையானது தற்போது அரசின் ஏராளமான முன்னேற்றக் கொள்கைகளால் குறிப்பிடத்தக்க கட்டமைப்பு மாற்றம் அடைந்துள்ளது. இது பாரதத்தின் வளர்ச்சியில்முன்னெப்போதும் அறியப்படாத ஒன்றாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.