ஆவணம் தரும் அரிய தகவல் வேதம் மதித்த பெண்குலம்

பாரதியார் இயற்றிய ‘பாஞ்சாலி சபதம்’ நூலில் ஒரு காட்சி. துரியோதனன் சபைக்கு இழுத்து வரப்பட்ட திரௌபதி ஒரு கேள்வியை எழுப்புகிறாள்: “பாண்டவர்கள் என்னைப் பணயமாக வைத்து இழந்தபின் தாங்கள் சூதில் தோற்றார்களா அல்லது தோற்று அடிமைகளான பின் என்னை வைத்து இழந்தார்களா?” இதற்கு பீஷ்மர் அளித்த பதில் இது என்று பாரதியார் பின்வருமாறு பதிவு செய்கிறார்: “கோமகளே! பண்டை யுக வேத முனிவர் விதிப்படி நீ சொல்வது நீதம் (முறை) எனக் கூடும். நெடுங்கால செய்தி அது. ஆணோடு பெண் முற்றும் நிகர் என்றே அந்நாளில் பேணி வந்தார்”.

அதாவது தொன்மையான வேத காலத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்ற உயரிய நிலை இருந்தது. அதிலிருந்து வீழ்ச்சியடைந்து துரியோதனர் களால் மகாபாரதக் காலத்தில் ஆண் பெண்ணை அடிமைப்படுத்தும் அவலம் ஏற்பட்டது. அந்தப் பண்டைய வேத காலத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு வேதமே சாட்சி. ஆம். வேதம்தான். ராமாயண, மகாபாரத, இதிகாசங்கள், புராணங்கள், சாத்திரங்கள்கூட அல்ல, வேதமே சாட்சி.

இதோ அந்தச் சான்று:
வேதம் கூறும் காலத்தில் ஒரு மனிதன் மரணமடைகிறான். அவன் மனைவி அவனைப் பிரிய மனமில்லாமல் அவனோடு இறுதி யாத்திரையில் பின்தொடரத் துடிக்கிறாள். அப்போது வேதம், அந்த இறந்து போன மனிதனை நோக்கிச் சொல்வது போலா இப்படிக் கூறுகிறது:
“ஏ மனிதனே! என்றென்றும் உன்னோடு ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கும் இந்தப் பெண் தொன்மையான தர்மமான பதிவிரதைப் பண்பால், தொடர்ந்து உன்னுடன் வர விரும்புகிறாள். உன் சந்ததியையும் செல்வத்தையும் பொறுப்பேற்றுப் பராமரிக்க அவள் இந்த உலகத்திலேயே இருக்கட்டும்.” இப்படி அறிவிக்கும் வேதம், மரணமடைந்தவனின் வாரிசு அவனுடைய மனைவி அல்லா மல் வேறு யாருமல்ல என்று விதிக்கிறது. அடுத்து, மரணமடைந்த மனிதனின் மனைவியைப் பார்த்து வேதம் சொல்கிறது:

“பெண்ணே! நீ உன் கணவன் சடலத்தின் அருகே கிடக்கிறாய். அவன் உயிர் போய் விட்டது. நீ எழுந்திரு. இந்த உலகத்தில் தொடர்ந்து வாழ்ந்து, உன் கரம்பிடிக்க விரும்பு கிறவனைத் திருமணம் செய்து கொள்”. இப்படிச் சொல்கிற வேதம் கணவனை இழந்த பெண்ணின் மறுமண உரிமையை நிலைநாட்டுகிறது. இதற்கு அடுத்தபடியாக, குல மரபின் படி தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவி யாக கணவன் சடலத்தின் கையிலிருந்து ஆபரணம் /ஆயுதம் / வைரம் எடுத்துக் கொள்ளும்படி வேதம் பெண்ணுக்குக் கட்டளையிடுகிறது.

ஆதாரம்: ரிக் வேத சம்ஹி தை (1.18.8), அதர்வ வேத சம்ஹிதை (11.3.1). தைத்திரீய ஆரண்யகம் (அனுவாகம் 1, பிரச்னம் 6). இறுதிச் சடங்கு நடத்தும் போது சொல்லக்கூடிய இந்த வேத மந்திரம் பிரகடனம் செய்வது என்ன? ஹிந்துத்து வத்தின் தூய வடிவம் எது என்பதைத்தான். ஹிந்து தேசத்தின் ஆதி காலச் சூழல் இப்படி இருக்க, சமூகத்தில் அதர்மம் தலைதூக்கி இழிவு புகுந்த பிறகு உடன்கட்டை ஏறுதல் போன்றவை நுழைந்தன. அவை மட்டும்தான் ஹிந்துத்துவம் என்று கொக்கரிப்பதற்கு ஏதாவது ஒரு கும்பல் அவ்வப்போது தலைதூக்கும். பல்லாயிரம் ஆண்டுப் புராதனமான வேதத்திற்கு, அண்மையில் ஹிந்து சாம்ராஜ்யமாக விளங்கிய விஜயநகரப் பேரரசு தோன்றிய காலத்தில் வாழ்ந்த சாயர் அனைவரும் ஏற்கும் (பாஷ்யம்) உரை எழுதினார். பெண்ணுக்கு வேதம் தரும் உரிமைகள் கொண்ட இந்த வேத வரிகளை மாற்றாமல், சிதைக்கா மல் அவர் அர்த்தம் சொன்னார். அவரது உரையின் ஆதாரத்தில்தான் மேற்கண்ட வரிகளின் சாரம் தமிழில் தரப்பட்டுள்ளது.

அதர்மிகளான துரியோ தனர்கள் எத்தனை முறை தலை தூக்கினாலும் ஹிந்து சமுதாயம் பின்பற்றும் வேத நெறி, பெண்ணு ரிமைக்கு உத்தரவாதம். இதற்கு வீர மங்கை அஹல்யா பாய் வாழ்வும் பணியுமே அத்தாட்சி. பீஷ்மர் வாய்மொழியாக பாரதி பதிவு செய்ததை நினைவில் கொள்வோம்.
வேத / யோக ஆராய்ச்சியாளரான முனைவர்
ம. ஜெயராமனுடன் நமது செய்தியாளர் வரலாற்றங்கரையான் நடத்திய உரையாடலிலிருந்து.