கோயில் சொத்தில் கை வைக்காதீர்கள்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற வி.ஹெச்.பி., அகில பாரத இணைச்செயலர் நாகராஜன், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “தி.மு.க பல வகைகளில் ஹிந்துக்களுக்கு எதிராக மட்டுமே செயல்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி, பல ஹிந்து கோயில்களை தரைமட்டமாக்கப்படுகிறது. தமிழகத்தில், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. மொத்தமுள்ள கோயில்களின் நிலங்களில் 60 சதவீதம் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றை உடனடியாக தமிழக அரசு மீட்க வேண்டும். கோயில் சொத்துகளில் தனியாரும், அரசும் கை வைக்கக்கூடாது. அதனை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. ஹிந்து சமய அறநிலையத்துறை சொத்துக்கள் மற்றும் வருமானத்தை, பக்தர்களுக்கும், கோயில்களின் மேம்பாட்டுக்கும் மட்டுமே செலவிட வேண்டும். ஆனால், கோயில் சொத்துக்கள் மற்றும் அதன் வருமானத்தை தி.மு.க அரசு வேறு துறைகளுக்கு பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இப்போக்கை தி.மு.க அரசு உடனடியாக கைவிட வேண்டும். ஹிந்து சமய அறநிலையத்துறை உண்மையில் ஹிந்துக்களுக்காக செயல்பட, சிறந்த ஆன்மிகவாதிகள் மற்றும் படித்த ஆன்மிகவாதிகள் கொண்ட குழு உருவாக்கி வாரியம் அமைக்க வேண்டும். கோயில்கள் தோறும் கோசாலை அமைக்க வேண்டும். தமிழக கோயில் சொத்துகளின் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். பொது இடங்களில் பசுவதை செய்வதை தடுத்து பசுக்களை பாதுகாக்க வேண்டும். ஒரு மதம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக அரசின் சபாநாயகர் அப்பாவு, இது அந்த மதத்திற்கான அரசு என பேசியது கண்டிக்கத்தக்கது” என கூறினார்.