தி.மு.க வாக்குறுதி கிருஷ்ணசாமி ஆவேசம்

தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் மா நில அரசின் வரியை குறைத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 5ம், டீசல் லிட்டருக்கு ரூபாய் 4ம் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தே, வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் தி.மு.க அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர். மாநில வரிவிதிப்பைக் குறைத்தும், வரி விதிப்பை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவதன் மூலமும் ஒரு லிட்டருக்கு ரூபாய் 25 முதல் 30 குறைக்க முடியும் என பிரச்சாரம் செய்தார்கள்.

ஆட்சிக்கு வந்த பிறகு, இரண்டு முறை ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று விட்டது. ஆனால், அதில், பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர தமிழக அரசு எவ்வித கோரிக்கையும் வைக்கவில்லை. மாறாக, பழனிவேல் தியாகராஜன், திரும்பத் திரும்ப மத்திய அரசை மட்டுமே குறை சொல்கிறார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பிற்கு ”தேதி போட்டிருந்தோமா?” என கேட்கிறார். எதைக் கேட்டாலும் வெள்ளை அறிக்கை தயாராகிறது என கூறுகிறார். வெள்ளை அறிக்கை நகலைக் காண்பித்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து வாங்கிக் கொள்ள முடியுமா? அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு மத்திய அரசை குறை சொல்லிவிட்டு, அடுத்த தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக ரூபாய் 5-ஐ குறைத்து விட்டு ”நாங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி விட்டோம்” என மக்களை மீண்டும் ஏமாற்றி ஒட்டு வாங்க காத்திருக்கிறார்களா? கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றப் பாருங்கள், இல்லையென்றால் இருக்கையை காலி செய்யுங்கள்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.