நாங்கள் பொறுமையாக இருக்கிறோம் என்பதற்காக நினைப்பதை எல்லாம் பேசினால் நாக்கிலும் கையிலும் சுளுக்கு எடுக்கப்படும்’ என்று மூத்த தி.மு.க பிரமுகர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பத்திரிகையாளர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது பொதுமக்கள் மத்தியிலும், பத்திரிகையாளர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் “நாங்கள் பொறுமையாக இருப்போம் ஆனால் பொறுமையாக இருக்கிறோம் என்பதற்காக நினைத்ததை எல்லாம் பேசினால்” என்று கூறி விட்டு நாக்கை கத்தரித்து விடுவோம் என்பது போல் சைகை செய்தார். மேலும் “அதற்கு சுளுக்கு எடுக்க வேண்டியதுதான். சுளுக்கு எடுக்கப்படும்” என்று அந்த சைகைக்கு விளக்கமும் அளித்தார் அவர். மேலும், ‘சில பேருக்கு நாக்கில், தி.மு.க என்றால் வேறு மாதிரி எழுதும் மற்ற சிலருக்கு, கையில் சுளுக்கு எடுக்க வேண்டியதிருக்கிறது. அதுவும் எடுக்கப்படும்’ என்றும் அவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, சமூக வலைத்தளங்களில், ‘தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்து ஒரு வாரமே ஆகும் நிலையில் இவரது பேச்சு, தி.மு.கவின் வன்முறைக் கலாச்சாரத்தை மீண்டும் ஊக்குவிப்பதை உறுதி செய்வதாகவெ உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை, அரசு மருத்துவமனைகளுக்கு வெளியில் ஆம்புலன்சிலேயே சிகிச்சை, மயானங்களில் குவியும் சடலங்கள் என்று தமிழகத்தில் மிக மோசமான நிலைமை இருப்பதை பத்திரிகையாளர்கள் வெளியுலகிற்கு கொண்டு வரக்கூடாது என்று மிரட்டும் விதமாக கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசி இருப்பதாக கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில்அன்றைய முதல்வர் பழனிச்சாமி குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி திட்டமிட்டே பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.கவினர் தற்போது உண்மையான தகவல்களை வெளியிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மிரட்டல் வருகின்றனர். தி.மு.கவை குறித்து வேறு விதமாக சித்தரிக்கும் இவர் போன்றவர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?’ என நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.