நில அபகரிப்பில் தி.மு.க பிரமுகர்

தமிழகமெங்கும் ஆளும் தி.மு.கவின் கவுன்சிலர்கள், பிரமுகர்கள் என பலரும் நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி என சட்டவிரோத செயல்பாடுகளை நிகழ்த்தி வருவது வாடிக்கையாகி விட்டது. அவ்வகையில் மற்றொரு சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். விவசாயியான இவரது நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான சுலைமான், போலி ஆவணம் தயாரித்து அபகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், தனது அடியாட்களுடன் அங்கு வந்த சுலைமான், விஜயகுமார் நிலத்தில் இருந்த 24 தேக்கு மரங்களையும் பிடுங்கி எறிந்ததோடு, பொக்லைன் இயந்திரம் மூலம் பயிர்களையும் நாசப்படுத்தி விட்டுச் சென்றார். இதுகுறித்து விஜயகுமார் காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால், ஆளும்கட்சி பிரமுகர் என்பதால் சுலைமான் மீது காவலர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தன் மீது புகார் அளித்ததை அறிந்த சுலைமான், மீண்டும் அடியாட்களுடன் சென்று விவசாயி விஜயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த விஜயகுமார், கோவணத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்துச் சென்றார், இதுகுறித்து பேசிய விவசாயி விஜயகுமார், “வெள்ளாளகுண்டம் பகுதியில் விவசாயம் செய்து வருகிறேன். எனது நிலத்தை தி.மு.க. பிரமுகரான சுலைமான சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார். இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சூழலில், எனது நிலத்திற்கு அடியாட்களுடன் வந்த சுலைமான், அங்கு வளர்த்து வந்த 24 தேக்கு மரங்களையும் வேருடன் பிடுங்கிப் போட்டு விட்டார். நிலத்தில் பயிரிட்டப்படிருந்த சோளப் பயிர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அழித்து விட்டார். இதுகுறித்து நான் கேட்டதற்கு, என் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார். தி.மு.க. பிரமுகர் சுலைமான் மீது நடவடிக்கை எடுத்து, எனது நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் கம்பி வேலியை அகற்ற வேண்டும். இல்லையென்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தற்கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.