மணல் திருட்டில் தி.மு.க கவுன்சிலர்

திருவண்ணாமலை, போளூர் அடுத்த கரிக்காத்துாரை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் சேத்துப்பட்டு தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இவர், செய்யாற்றில் இருந்து மணலைக் கடத்தி, முருகபாடி கிராமத்தில் 10 ஏக்கரில் கிடங்கு அமைத்து விற்பனை செய்து வந்துள்ளார். சந்தேகம் வராமல் இருக்க, தான் திருடி குடோனில் குவித்து வைத்துள்ள மணல் மீது லேசாக எம்.சாண்ட் துாவி வைத்துள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து தனிப்படை காவலர்கள் கோவிந்தசாமியின் மணல் கிடங்கில் சோதனை நடத்தினர். அங்கு மூன்று டிராக்டர்கள், ஒரு மினி லாரி, பொக்லைன் இயந்திரம் உள்ளிட்ட வாகனங்களையும் 106 யூனிட் ஆற்று மணலையும் கைப்பற்றிய காவலர்கள், தி.மு.க கவுன்சிலர் கோவிந்தசாமி உட்பட ஐந்து பேரை கைது செய்தனர். மணல் பதுக்கலுக்கு பயன்படுத்திய குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. இவர் ஒரு வருடத்திற்கு முன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தி.மு.கவில் இணைந்தவர்.