திசைத் திருப்பும் மிஷனரிகள்

தூய இருதய மேல்நிலைப் பள்ளியின் கிறிஸ்தவ மதமாற்றக் கொடுமையால் தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தேசத்தையே உலுக்கியது. இதில் உள்ள மதமாற்ற குற்றத்தை மறைக்க தி.மு.க அரசும், அதன் அமைச்சர்களும், கிறிஸ்தவ அமைப்பினரும் தொடர்ந்து முயற்சிக்கின்றனர்.

அதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் என்ற ஒரு கிறிஸ்தவ அமைப்பு இவ்விவகாரத்தை விசாரிக்க ஒரு உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது. ,இக்குழு, லாவண்யாவின் மரணத்தில் உள்ள மதமாற்றக் கோணம் புனையப்பட்டு அரசியலாக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் என்பது 100 என்.ஜி.ஓ’க்களின் வலையமைப்பு. இதன் தலைவர்களான சூசை ராஜ், ஆண்ட்ரூ சேசுராஜ் இருவரும், ‘ஜீவ ஜோதி’  என்ற என்.ஜி.ஓ’வை நடத்துகின்றனர். ஜீவ ஜோதிக்கு, ரோமில் உள்ள கத்தோலிக்க அமைப்பான கரிட்டாஸ் நிதியளிக்கிறது. மேலும், கல்வி உரிமை மன்றம் (ஆர்.டி.இ.எப்) என்பது நாடு முழுவதும் உள்ள சுமார் 10,000 என்.ஜி.ஓ’க்களின் கூட்டமைப்பு. அவை குறுங்குழுவாத கல்வி உரிமைச் சட்டத்தை ஆதரிக்கின்றன.

இதில் ஒன்றான வேர்ல்ட் விஷன் என்ற பிரபல கிறிஸ்தவ அமைப்பு, சமூக சேவை என்ற பெயரில் குழந்தைகளிடம் கிறிஸ்தவ மத நம்பிக்கையை விதைப்பதை அதன் இணையதளத்திலேயே பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. மற்றொரு அமைப்பான பீப்பிள்ஸ் வாட்ச் என்ற அமைப்பு, ‘ஓரங்கட்டப்பட்ட மக்களை, வறுமை மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பதற்காக அவர்களை மாற்றுவதற்கான ஒரு கிறிஸ்தவ இறையியல் அணுகுமுறையை பின்பற்றுகிறோம்’ என தெரிவித்தே பணியாற்றுகிறது. கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு வெளிநாட்டு நிதியைப் பெற்று அளித்ததால் அதன் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அதன் எப்.சி.ஆர்.ஏ உரிமமும் நிறுத்தப்பட்டது.

இதுபோன்ற இவர்களின் பின்னணி, லாவண்யாவின் மரணத்தில், இவர்கள் அமைத்த உண்மை கண்டறியும் குழுவின் தன்மை, அதன் விசாரணை அறிக்கையின் உண்மைத் தன்மைகளை வெளிப்படுத்துகிறது. மேலும், தற்போது சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சி.பி.ஐ விசாரணையை திட்டமிட்டு குழப்பும் வகையிலும், அழுத்தம் தரும் விதத்திலுமே இந்த அறிக்கையை இவர்கள் திட்டமிட்டு வெளியிட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.