வாரணாசி கியான்வாபி மசூதியில் ஆய்வுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

கியான்வாபி மசூதியில், தொல்பொருள் ஆய்வுத்துறை நடத்தும் ஆய்வை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வாரணாசி நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகேயுள்ள கியான்வாபி மசூதி, கோயில் வளாகத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. அங்கு அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தவேண்டும் என்று கோரி வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அங்கு தொல்பொருள் ஆய்வுத்துறை ஆய்வு மேற்கொள்ள வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கியான்வாபி மசூதி சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியென்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியது. இந்த உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் கியான்வாபி மசூதியில் நடைபெறும் ஆய்வை நிறுத்த வேண்டும் என கியான்வாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டஜமியா மசூதி குழு வாரணாசி நீதிமன்றத்தில் முறையிட்டது. பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை மீறி தொல்பொருள் ஆய்வுத்துறை ஆய்வு நடத்துவதால், அதைநிறுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தபோது, அரசு வழக்கறிஞர் ராஜேஷ் மிஸ்ரா வாதிடுகையில், ‘‘தொல்பொருள் ஆய்வு நடத்துவதற்கான அனுமதி அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திடம் ஏற்கெனவே பெறப்பட்டுவிட்டது என மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஸ் கூறியுள்ளார் என்றார். இதையடுத்து வாரணாசி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘‘இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் தனியார் அமைப்பு அல்ல. அது அரசு பணியை செய்கிறது. இந்த விவகாரத்தில் எந்தஉத்தரவையும், இந்த நீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியாது’’ என கூறியது.

மேலும், கியான்வாபி மசூதியில் உள்ள சீலிடப்பட்டுள்ள பகுதியான ஒசுகானாவில் ஆய்வு நடத்த வேண்டும் என இந்து அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை அக்டோபர் 5-ம் தேதி விசாரிப்பதாக வாரணாசி நீதிமன்றம் கூறியது.