பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நடைபெற்ற ஒரு அகழ்வாராய்ச்சியின் போது, 1857ம் ஆண்டு நடைபெற்ற பாரதத்தின் முதல் சுதந்திரப் போரில் பங்கேற்ற 282 பாரத வீரர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஜே.எஸ்.செஹ்ராவத் தெரிவித்துள்ளார். இவை பஞ்சாபின் அமிர்தசரஸ் அருகே அஜ்னாலாவில் உள்ள ஒரு மதக் கட்டமைப்பின் அடியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டன. இந்த வீரர்கள், பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டுக்கொழுப்புத் தடவப்பட்ட தோட்டாக்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள். இவர்கள் ஆங்கிலேய அரசால் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்பதை ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டுவதாக செஹ்ராவத் கூறினார். கடந்த மே 10 அன்றுதான் 1857ல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற முதல் சுதந்திரப் போரில் பங்கேர்றவர்களுக்கு பாரதம் மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தியது நினைவு கூரத்தக்கது.