கோயில் பூஜைக்கு வைப்பு நிதி

தமிழகத்தில் போதிய வருமானம் இல்லாத சுமார் 12,959 கோயில்களில் ஒரு கால பூஜை நடைபெறுவதற்கு தமிழக அரசு ரூ.129.59 கோடியை தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்தது. இதற்காக பெரிய கோயில்களின் உபரி நிதியிலிருந்து நிதி பெறப்பட்டு ஆலய மேம்பாட்டு நிதி ஏற்படுத்தப்பட்டது. ஏற்கனவே, ஒருகால பூஜை நடைபெறும் கோயில்களுக்கு வைப்பு நிதியாக அளிக்கப்பட்டு இருந்த ரூ. 1 லட்சம் இதன் மூலம் ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது நல்ல விஷயம்தான். வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டியது, முஸ்லிம் மதப் பள்ளிகள், கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு அரசு வாரி வழங்குவது போல இது ஒன்றும் அரசு பணம் அல்ல. இந்த பணம் மற்ற பெரிய கோயில்களில் ஹிந்து பக்தர்கள் காணிக்கையாக அளித்ததில் இருந்து பெறப்பட்ட பணம்தான். மேலும், இந்த வைப்புத் தொகைகளுக்கான அதிகபட்ச வட்டி 8 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிட்டால் இதில் வரும் மாத வருமானம் ரூ. 1,333 வரும் அப்படியெனில் தினசரி வருமானம் ரூ. 44 மட்டுமே. இந்த 44 ரூபாயில்தான் கடவுளுக்கு ஒருகால பூஜைக்கான அபிஷேக பொருட்கள், பூ, பழம், நைவேத்தியம் உட்பட அனைத்தும் செய்யப்பட வேண்டும். எனவே, தமிழக அரசு, பெரிய கோயில்களின் பணத்தை சுரண்டி மற்ற கோயில்களுக்குத் தராமல், மற்ற மத நிறுவனங்களுக்கும் தருவதுபோல, தனது வரிப் பணத்தை தந்து பூஜைக்கு கணிசமான தொகை வருமானமாக கிடைக்கும் வகையில் வைப்புத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.