விளையாட்டுத் துறைக்கென வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி ‘ஹாக்கி மந்திரவாதி’ என்று புகழப்படும் பாரத ஹாக்கி அணியின் தன்னிகரில்லா தயான் சந்த்தின் பெயரால் தயான் சந்த் கேல் ரத்னா விருதாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவில், ‘கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தயான் சந்த்தின் பெயரிட பாரதம் முழுவதிலுமிருந்து பல்லாயிரம் கோரிக்கைகள் வந்ததையடுத்து மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக கேல் ரத்னா விருது மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படும்! ஜெய் ஹிந்த்’ என தெரிவித்திருந்தார்.
பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில், தயான் சந்த் ராணுவத்தில் பணியாற்றினார். அன்றைய ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர், தயான் சந்தின் திறமைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டார், அவருக்கு ஜெர்மன் குடியுரிமை, ஜெர்மன் ராணுவத்தில் கர்னல் பதவியை வழங்கினார். ஆனல், தாய்நாட்டுப் பற்றால் தயான் சந்த் இந்த வாய்ப்பை நிராகரித்தார்.
பாரதத்தின் மிகச்சிறந்த ஹாக்கி மேஸ்ட்ரோவான தயான் சந்த், அசாதாரணமாக கோல் அடிக்கும் திறமை கொண்டவர். 1928, 1932, 1936ம் ஆண்டுகளில், மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பாரதத்திற்கு தங்கப் பதக்கங்களை வென்றுகொடுத்தவர்.
1926 முதல் 1949 வரை சர்வதேச ஹாக்கி போட்டிகளில் விளையாடினார். மொத்தம் 185 விளையாட்டுகளில் 570 கோல்களை அடித்தார். பாரத அரசு 1956ல் பாரதத்தின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகனான பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது. அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.