கிழிந்தது முகத்திரை கலைந்தது கம்யூனிஸ்ட் கனவு

கியூபாவில் அரசுக்கு எதிராக அந்நாட்டு பொதுமக்கள் நடத்திய பெரும் போராட்டம் உலக ஊடகங்களில் மிகுந்த கவனத்தைப் பெற்றது. ஆனால் நம் நாட்டில் அந்த சம்பவம் உரிய கவனம் பெறவில்லை. ஒரு பக்கம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்ட வாண வேடிக்கைப் பேரோசை. இன்னொரு பக்கம் மோடி அரசை நொட்டைச்சொல் சொல்ல துடிக்கும் விமர்சன பேரிரைச்சல். இவற்றால் கம்யூனிஸ்ட் கனவுத் தீவான கியூபாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்துள்ள கோபக் குரலை அமுக்கி விடலாம் என்று இடதுசாரிகள் ஊடுருவிய இந்திய ஊடகங்களின் நப்பாசை.

ஆனால் இணையதள உலகம் எப்போதும் விழித்திருக்கிறது. அதன் வழியே கியூபாவில் வெடித்துள்ள “மறு புரட்சி” செய்தி கசிந்து கொண்டே இருக்கிறது.கியூபாவில் கடந்த ஜூலை 11-ம் தேதி பொதுமக்கள் ஜனநாயக கோஷம் எழுப்பியபடி ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வீதிக்கு வந்தனர். முதலில் சான் அன்டோனியோ டிலாஸ் பானோஸ் என்ற நகரத்தில் இது தொடங்கியது என்று கூறப்படுகிறது.

அடுத்த சில மணி நேரத்தில், சமூக வலைதளத்தில் இது காட்டுத் தீயாகப் பரவியது. இன்னும் ஏராளமான நகரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி ஆங்காங்கே ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர். சிற்றூர்களும் நகரங்களுமாக அந்த நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடந்தேறியது.

ஆர்ப்பாட்டத்தில் பல தரப்பட்ட வயதினரும் கலந்துகொண்டு வீதியில் இறங்கினர். பெரும்பாலும் இளைஞர்கள். ஆர்ப்பாட்டக்காரர்களிடையே பல பெண்கள். தங்களைப் போன்ற சாதாரண மக்களுக்கு உலகத்தின் பிற பகுதிகளில் கிடைக்கும் வாய்ப்புகளும் வசதிகளும் காலாவதியான ஏதோ சித்தாந்தத்தின் பெயரில் தங்களுக்கு மறுக்கப்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அவர்கள் முடிவுக்கு வந்துவிட்டனர்.பாத்திரம் கரண்டிகளால் ஓசையெழுப்பியபடி, ‘சுதந்திரம் வேண்டும்’, ‘சர்வாதிகாரம் ஒழிக’ என்று அவர்கள் கோஷமிட்டனர்.

உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு, தனி மனித உரிமைகளுக்கு கட்டுப்பாடு, மின் துண்டிப்பு, அதிகரிக்கும் கோவிட் பாதிப்பு… இவையெல்லாம் கியூபாவாசிகளின் கோபாவேசத்துக்கு காரணம்.இன்றைய கியூபாவில் இணைய வசதி உண்டு. வெளியுலகம் எப்படி இருக்கிறது என்று இன்றைய தலைமுறையினருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. மிகப்பெரிய பொருளாதார இக்கட்டில் சிக்கியுள்ள கியூபா தனக்குத் தேவையான மருந்துகளைக் கூட பெற முடியவில்லை. தலைவலி மாத்திரைக்குக் கூட தட்டுப்பாடு என்கிறது ஓர் ஆங்கிலப் பத்திரிகை.இதில் எங்கிருந்து வெளிநாட்டு தடுப்பூசிகளை வாங்குவது? அதே நேரத்தில் சொந்தமாகத் தடுப்பூசி உருவாக்கி வருவதாகத் தகிடுதத்தமும் நடக்கிறது.கம்யூனிஸ புரட்சிக்குப் பிறகு உருவான அரசுக்கு எதிராக போராட்டமா? அது பெருங்குற்றமல்லவா? – இதை வளர விடலாமா? சர்வாதிகார அரசு செயலில் இறங்கியது.

அரை நூற்றாண்டாக்கும் மேலாக காஸ்ட்ரோ குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி காலத்தில் பட்டை தீட்டப்பட்ட இப்போதைய அதிபர் மிகுவல் டியாஸ் கேனல், பிரதமர் மானுவல் மரேரோ தலைமையிலான கொடுங்கோல் அரசுக்கு இது போன்ற ‘புரட்சியின் எதிரிகளை’ எப்படி கையாள வேண்டும் என்று நன்கு தெரியும். உண்மையான கவலைகளுடனும் கோரிக்கைகளுடனும் வீதிக்கு வந்து போராடியவர்களை ‘புரட்சிக்கு எதிரான துரோகிகள், முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள்’ என்று முதலில் முத்திரை குத்துவது, கட்சி குண்டர்களை ஏவுவது, காவல் படையினரை சாதாரண உடையில் அனுப்பி ஆர்ப்பாட்டக்காரர்களை அடி உதை கொடுத்து விரட்டியடிப்பது, – ‘பொதுமக்களே’ துரோகிகளுக்கு பாடம் புகட்டியதாகப் பெயர் சூட்டுவது… இதுபோன்ற சில்லறை நாடகங்கள் இப்போதும் அரங்கேறின.

பொறுமையிழந்து, தங்கள் அடிப்படை தேவைகளுக்காக குரல் எழுப்பியவர்களுக்கு எதிராக வந்த நடவடிக்கைகள், இவைதான். – சாதாரண உடையில் வந்த காவல் படையினர் கட்டை, கம்பு, பேஸ்பால் மட்டைகள் என்று “வீட்டு ஆயுதங்களால்” ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கினர். சீருடையில் இருந்தவர்கள், கண்ணீர்புகை குண்டுவீச்சு, ரப்பர் தோட்டா துப்பாக்கிச்சூடு என்று அடக்குமுறையில் இறங்கினர்.வீடு வீடாகப் புகுந்து “புரட்சியின் எதிரிகள்”, “துரோகிகள்” அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில நூறு பேரைக் காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

கைதான பலர் கட்டாய ராணுவ பயிற்சி என்ற பெயரில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுவார்கள். அதுவே அங்கு “ஊர் வழக்கமாக” இருந்து வருகிறது. தங்கள் நியாயமான குரலுக்கு இதுதான் அரசின் பதிலாக இருக்கும் என்று தெரிந்தே பொதுமக்கள் தெருவில் இறங்கினர். வலி எப்படிப்பட்டதாக இருக்கும் என்று தெரிந்தே அவர்கள் எதற்கும் துணிந்தனர். இணையத் தொடர்பால் உலகமே இதைக் கண்டது.இதற்கு முன்பும் கம்யூனிஸ கொடுங்கோலர்களுக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கியூபாவின் சர்வ ரட்சகனாக இருந்த சோவியத் யூனியன் உடைந்தபோதும், அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. அன்று மக்கள் பொங்கி எழுந்தனர். அப்போதும் இரும்புக்கரம் கொண்டு போராட்டங்கள் அடக்கப்பட்டன. எதிர்ப்பு வளரவோ வலுக்கவோ கூடாது என அன்று தொடர்ச்சியாக எடுத்த நடவடிக்கைகள் வெளியுலகுக்கு உடனே தெரிய வரவில்லை. அங்கிருந்து வெளியேறி அரசியல் அகதிகளாக அமெரிக்கா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள் வாயிலாகவே அடக்குமுறைக் கதைகள் நமக்குத் தெரிய வந்தன.

தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் ஆட்சியாளர்கள் மனதைத் தொட்டதா… இல்லவே இல்லை.ஊர் வாயை மூடும் முயற்சியாக, இப்போதும், இணையதளத்துக்கு கட்டுப்பாடு, சமூக ஊடகங்களின் முடக்கம் என்ற வழக்கமான நடைமுறைகளில் கியூபா அரசு இறங்கியுள்ளது. ஆனால் இவையெல்லாம் எத்தனை நாள் நீடிக்கும்? டிரம்ப் ஆட்சிக்காலத்து கடுமையான பொருளாதாரத் தடைகள் ஒரு புறம்; மறுபுறம், கோவிட் தொற்று அச்சுறுத்தலால் சர்வதேச சுற்றுலாவாசிகள் மூலமான வருவாய் வற்றிவிட்டது.

இயல்பான பொருளாதார நடவடிக்கைகள் எதுவுமின்றி பணத்துக்கு தத்தளிக்கும் நிலையில், மிக அதிக கட்டணம் மூலமாக வருவாய் ஈட்ட உதவும் இணையதளத்தை கியூபா அரசு நீண்ட காலத்துக்கு முடக்கி வைக்க இயலாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நாடெங்கும் ஜூலை 11-ம் தேதி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. “இவையெல்லாம் அந்நிய சக்திகளின் கூலிப்படை வேலை, எதிரி சூழ்ச்சி” என்று அடுத்த நாள் அதிபர் உரையாற்றினார்.

இந்த உரைக்குப் பிறகு தலைநகரில் முந்தைய நாளைவிட மேலும் அதிகமான மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்!எனவேதான் இந்த ஒட்டுமொத்த சம்பவத்தை திருப்புமுனை போராட்டம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.இனியும் போராட்டங்கள் நடக்கும்; அவை வெளியுலகுக்கு தெரியத்தான் போகிறது.கம்யூனிஸ சொர்க்கமாக சித்திரிக்கப்பட்ட கியூபா கனவு கலைந்து வருகிறது. கனவைக் கலைத்த அன்றைய போராட்டத்தை நடத்தியவர்களுக்கு அரசியல், சித்தாந்த ரீதியான உள்நோக்கம் இல்லை; அவர்கள் அன்றாடத் தேவைக்காக குரல் எழுப்பிய பாமரர்கள்.கியூபாவில் கொடுங்கோன்மை என்ற அரக்கனின் கோர முகத்தை இதுநாள் வரை மூடியிருந்த முகத்திரை கிழிந்துவிட்டது. இனி எத்தனை மூட முயற்சித்தாலும் அதனை மறைத்துவிட முடியாது.

-கே.சஜீவன்