கேரளா மேயருக்கு சி.பி.எம் அழுத்தம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்புகளில் ஒன்றான பாலகோகுலம் ஏற்பாடு செய்திருந்த அன்னையர் சந்திப்பு நிகழ்ச்சியில் கோழிக்கோடு மாவட்ட மேயர் பீனா பிலிப் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “வட இந்திய மாநிலங்களை விட குழந்தை பராமரிப்பு முறையில் கேரளா மிகவும் பின்தங்கியுள்ளது. வட இந்திய மாநிலங்களில் குழந்தைகள் அண்டை வீட்டில் இருந்தாலும் நன்றாக நடத்தப்படுகின்றனர். ஆனால், கேரளாவில் அப்படி இல்லை. கூட்டத்தில் கலந்து கொண்டு தாய்மார்களுடன் பேசுவதற்காகவே வந்தேன். இதில் வகுப்புவாத கூறுகள் எதுவும் இல்லை” என்று கூறினார். இது அங்குள்ள ஆளும் கட்சியான இடதுசாரிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைமை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. பாலகோகுலம் நிகழ்ச்சியில் மேயர் பங்கேற்பது கட்சியின் அணுகுமுறைக்கும் நிலைப்பாட்டுக்கும் எதிரானது என்று கூறியுள்ள தலைமை, இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் மாவட்ட தலைமைக்கு உத்தரவிட்டுள்ளது. எனினும், பீனா பிலிப், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  தனது முடிவை ஆதரித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு தனது கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும், பாலகோகுலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதாக நான் கருதவில்லை. அக்கூட்டத்தில் நான் பேசியது குழந்தைகளின் தேவைகளைப் பற்றிய பெற்றோரின் அணுகுமுறையைப் பற்றியது மட்டுமே. குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பற்றி அல்ல என்று விளக்கமளித்துள்ளார்.