கட்டாய மதமாற்ற தடுப்பு மசோதா

ஹரியானாவில் கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் மசோதாவை அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசு அறிமுகப்படுத்தியது. வழக்கம் போல காங்கிரஸ் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. சட்டசபையில் மசோதாவை அறிமுகம் செய்து பேசிய ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ், “கவர்ச்சி, கட்டாயம் பலாத்காரம், மோசடி உள்ளிட்ட வழிகளில் மதம் மாறுவது நாட்டுக்கு ஆபத்தானது. இது சரி செய்யப்பட வேண்டும். மசோதா விதிகளின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மதமாற்றத்திற்குப் பின்னால் எவ்வித தவறான நோக்கமும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். தவறினால் ஒரு வருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 1 லட்சம் ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்” என்றார். இந்த மசோதாவில் எந்த மதத்தின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. மோசடியான வழிகளில் மதமாற்றங்களைத் தடுப்பதை மட்டுமே இதன் நோக்கம். காங்கிரஸ் தலைவர் ரகுவீர் சிங் காடியன் சட்டசபையில் மசோதாவின் நகலை கிழித்தெறிந்து எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்த மசோதாவை விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) வரவேற்றுள்ளது. இது குறித்து வி.ஹெச்.பி இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் பேசுகையில், “இந்த காங்கிரஸ் இனி மகாத்மா காந்தியின் காங்கிரஸ் அல்ல, ஆனால் கிறிஸ்தவ சோனியாவின் காங்கிரஸ். மகாத்மா காந்தியின் காங்கிரஸ் பல மாநிலங்களில் மதமாற்ற எதிர்ப்பு மசோதாக்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் சோனியாவின் காங்கிரஸ் அத்தகைய மசோதாக்களை அழிக்கத் தீர்மானித்துள்ளது. மோசடியான மதமாற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயங்கரவாதிகளும் தேசவிரோதிகளும் தீவிர ஆதரவு அளிக்கின்றனர். இத்தகைய மதமாற்றங்களால் பல இடங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராகக் குறைந்துள்ளனர். அவர்களின் உயிருக்கும், தொழில்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு இல்லை” என்றார்.