மீட்புப் பணியில் மலிவு அரசியல்

தமிழக மாணவர்கள் 2,223 பேர் உக்ரைனில் உள்ளனர். வெளியேற்றப்படும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை ஒருமுகப்படுத்தப்பட்ட தலையீட்டின் மூலம் அதிகரிப்பதற்காக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்ப மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலினின் இந்த அறிவிப்பிற்கு மக்களிடம் கண்டனமும் கோபமும் எழுந்துள்ளது.

ஸ்டாலின் கைகாட்டியவர்களைவிட விட மிகச் சிறப்பாக ஏற்கனவே மத்திய அரசின் வெளியுறவுத்துறை, உள்துறை, ராணுவம் என அனைத்துத் துறைகளும் அல்லும் பகலும் மிக சிறப்பாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில், அங்கு செல்லும் தமிழக பிரதிநிதிகள் பெரிதாக என்ன செய்துவிட போகிறார்கள்? மாநில அரசின் வரம்பு எது, மத்திய அரசின் வரம்பு எது என்ற அடிப்படை கூடவா தெரியாமல் போனது ஸ்டாலினுக்கு?

நமது மத்திய அரசு மீட்புப் பணிகளில் தமிழர்கள் என்றோ, குஜராத்திகள் என்றோ ஹிந்துக்கள் என்றோ சிறுபான்மையினர் என்றோ மாணவர்களிடம் எந்த பாகுபாடும் காட்டவில்லை. அனைவரையும் பாரத குடிமக்களாகவே கருதி மீட்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்ப் பிரிவினையை தூண்டி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், இதன் மூலம் தன்னை தேசிய அளவிலான தலைவராக காட்டவும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர்களில் முன்னிலை வகிக்கவும் விரும்புகிறாரா? அல்லது தமிழக மாணவர்கள் மீது மத்திய அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்ற எண்ணத்தை உருவாக்க  விரும்புகிறாரா? அல்லது மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘ஆபரேஷன் கங்கா’ மீது சேற்றை வாரியிறைத்து அதன் மீது தனது தி.மு.க ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ள முயற்சிக்கிறாரா?

தன்னை ‘திராவிட ஸ்டாக்’ என்று சொல்லிக்கொள்ளும் ஸ்டாலின்  ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அல்ல, தமிழ் மாணவர்கள் என்று திட்டமிட்டே கூறியுள்ளார். அப்படியெனில் மற்ற மாநில மாணவர்கள் எப்படி போனாலும் பரவாயில்லையா? சரி, இவரது கூற்றுப்படியே வைத்துக்கொண்டாலும், தமிழகம் மட்டும்தான் திராவிட நாடா? ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா எல்லாம் திராவிட நாட்டின் பகுதிகள் இல்லையா?

கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் பினராயி விஜயன்கூட, பிப்ரவரி 23ல் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தனது மாநிலத்தைச் சேர்ந்த 2,320 மாணவர்கள் மற்ற பாரத மாணவர்களுடன் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பாக திரும்ப ஏற்பாடுகளை செய்யவும் அமைச்சகத்தின் அவசர தலையீடு தேவை’ என்று கோரியிருந்தார். ஆனால், வெளியேற்றத்தில் மலையாளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரவில்லை. குறைந்தபட்சம் இந்த பரந்த மனப்பான்மை கூடவா இல்லாமல் போனது ஸ்டாலினுக்கு?

ஸ்டாலினின் இந்த முயற்சிகள் எல்லாம் மாணவர்களுக்கு உதவும் உண்மையான முயற்சியாக இல்லாமல் அரசியல் வித்தையாகவே பார்க்கப்படுகிறது. இந்த அரசியல் வித்தைகள் மாணவர்கள் மீட்பில் குழப்பத்தையே உருவாக்கும். ஒவ்வொரு மாநில அரசும் இதையே செய்தால், அது மாணவர்களுக்கு தேவையற்ற குழப்பத்தையும், துயரத்தையும்தானே அளிக்கும்?

ஆபரேஷன் ராஹத் , வந்தே பாரத் போன்ற பல மிஷன்களின் மூலம் கடந்த இக்கட்டான காலகட்டங்களில் அனைத்து பாரத குடிமக்களையும் பாரத வம்சாவளியினரையும் இன்னும் சொல்லப்போனால் பல வெளிநாட்டினரையும்கூட காப்பாற்றிய நமது மத்திய அரசின் சாதனையை  உலகறியும். ‘வசுதைவ குடும்பகம்’ என உலகையே ஒரு குடும்பமாக பார்த்து உதவிகள் செய்து வருகிறது மத்திய அரசு. ஆனால், உள்ளூர் ​​அரசியல்வாதிகள் செய்யும் இதுபோன்ற மலிவான அரசியல்கள் வேதனையளிக்கிறது.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என பெயர் பெற்ற தமிழகத்தில் இப்படியொரு சுயநலமா? நமது மேலான பாரத கலாச்சார மேன்மையை அறிந்த ஒரு தமிழக மாணவர், தனக்கான முன்னுரிமையை தமிழரல்லாத சக மாணவருக்கு விட்டுக் கொடுப்பார். இதுதான் தமிழர் பண்பாடும் நாகரீகமும். இதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா ஆள்பவர்கள்? இதை சிந்திக்க வேண்டியது ஆள்பவர்கள் மட்டுமல்ல மக்களும்தான்.

மதிமுகன்