‘தமிழகம் முழுவதும் தலித் மக்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து தகவல்கள் சேகரித்து வருகிறோம். இதற்காக, பல தலித் இயக்கத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். இதில் நாங்கள் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை சேர்க்கவில்லை. காரணம், அவர்களுக்கு தலித் பிரச்னைகளை தீர்ப்பதிலும், தலித் முன்னேற்றத்திலும் ஆர்வமில்லை. தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை கிட்டத்தட்ட நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதேபோல, பறையரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில், பறையர், சாம்பவர், ஆதிதிராவிடர் என, தனித்தனியாக பெயரிட்டு அழைக்கின்றனர். இந்த மூவரையும் ஆதி திராவிடர் என, ஒரே பெயரிட்டு அழைக்க வேண்டும் என்பது எங்கள் முதல் கோரிக்கை. இரண்டாவது கோரிக்கையாக தமிழகம் முழுதும், 1.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன. அவை தலித்துத்களுக்கு உரியவை. அவை தற்போது தலித் அல்லாதோரிடம் இருக்கிறது. அதை மீட்க வேண்டும். பல கிராமங்களிலும், தலித் மக்கள் வசிப்பிடங்கள் சேரி, காலனி, அரிஜன காலனி, பறத் தெரு, பள்ளத்தெரு என, அழைக்கப்படுகிறது. இதுவும் ஒரு தீண்டாமை தான்; அதை ஒழிக்க, அப்பகுதிகளை பொதுப் பெயரிட்டு அழைக்க அரசு உத்தரவிட வேண்டும் என்பது எங்களின் மூன்றாவது கோரிக்கை. இவற்றை வலியுறுத்தி தலித் இயக்கங்கள் போராட்டம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி