சாகசங்கள் புரிந்த சத்ரபதி சிவாஜி

சில நூற்றாண்டுகள் நாடு இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைப்பட்டிருந்த போது அதை உடைத்தெறியும் உத்வேகம் ஏற்படச் செய்தவர் சத்ரபதி சிவாஜி. தேசபக்த நெஞ்சங்களில் தேசிய எண்ணத்தை உண்டாக்கும் வாழ்க்கை சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை. பொது யுகத்திற்குப் பிந்தைய 1630, பிப்ரவரி 19ம் தேதி பிறந்தார் சிவா. அவரது தந்தை சாஜி போன்ஸ்லே பெரும் வீரராக விளங்கினார்; ஆயினும் இஸ்லாமிய அரசர்களிடம் பணிபுரிந்தார்.

சிவாஜியின் தாய் ஜீஜாபாய், தனக்குப் பிறக்கும் குழந்தை சிறந்த வீரனாக, பகைவர்களை வெல்பவனாக, அரசாட்சி செய்பவனாக, ஹிந்து ராஜ்யம் அமைப்பவனாக விளங்க வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். எனவே சிவாஜி பிறந்ததும் “தாயே, ஹிந்து தேசத்தை பெரியதாக்கி அதையும் சீக்கிரமாக எங்கள் கண்முன் காட்டுவாயாக” என வேண்டிக்கொண்டார். சிவாஜிக்கு, ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து ராமர், கிருஷ்ணர் மற்றும் பலரின் வீரதீர பராக்கிரமங்களை கதைகளாகச் சொல்லிவந்தார். அதுவே அவரை மாவீரர் ஆக்கியது.

தாதாஜி கொண்டதேவ் என்ற அந்தணரின் பொறுப்பில் சிவாஜியை வளர்க்க ஏற்பாடு செய்தார். மேலும் புனே பாளையத்தின் நிர்வாகப் பொறுப்பையும் தாதாஜியிடமே கொடுத்தனர். தாதாஜி பொறுப்பேற்ற பின் புனே பாளையம் செழிப்பான நிலைக்கு வந்தது. விவசாயத்தை மக்களிடம் உற்சாகப்படுத்தவும், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவும் தங்கத்தினால் செய்யப்பட்ட ஏர் ஒன்றை சிவாஜியைக் கொண்டு உழச் செய்தார் தாதாஜி; மக்களுக்கு தன்னம்பிக்கையும் புது தெம்பும் பிறந்தது.

சிவாஜி, வாள், வில் பயிற்சி, குதிரையேற்றம், யானை ஏற்றம் போன்ற பயிற்சிகளைப் பெற்றார். போர் செய்யும் கலைகளை அறிந்தார். மேலும் மராத்தி, சமஸ்கிருதம், பாரசீகம் ஆகிய மொழிகளைக் கற்றார். சாய்பாய் நிம்பல்கர் என்பவரை 1640ம் ஆண்டு சிவாஜி மணம் முடிந்தார். சிவனேரிக் கோட்டையை சுற்றியுள்ள சஹ்யாத்ரி மலைகளில் சிவாஜி கால்படாத இடமில்லை.சிவாஜி தன் நண்பர்களுடன் மலை, அடர்ந்த காடுகளில் சுற்றினார். சில இளைஞர்களைக் கொண்டு படை ஏற்படுத்தினார். சுதந்திர தேசத்தை உருவாக்கும் எண்ணத்தில் உறுதி கொண்டிருந்தார். அதன் தொடக்கமாக, ரோஹித் கோட்டைக்குள் இருக்கும் ஆலயத்தில் நண்பர்களுடன் இறைவனை பிரார்த்தனை செய்தார். அப்போது தன் உடைவாளையெடுத்து தன் விரலை கீறி ரத்த அபிஷேகம் செய்து சபதம் ஏற்றார். அதைத் தொடர்ந்து அவருடன் இருந்த மற்ற நண்பர்களும் அவ்வாறே சபதம் ஏற்றனர்.

தோரணா கோட்டையில் காவிக்கொடி!
1646ம் ஆண்டு பீஜப்பூரின் தோரணா கோட்டையை வென்று அதில் காவிக்கொடியைப் பறக்கவிட்டார் சிவாஜி. பின்னர் சாகன் கோண்டனா, புந்தர் கோட்டைகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து பல கோட்டைகளை கைப்பற்றிக்கொண்டே இருந்தார். மல்ஹர் ராம்ராவ் சிட்னியில் என்பவர் ‘சத்ரபதி சிவாஜி மஹாராஜன்சே சப்தப்ரகாரணத்மகீ’ என்ற புத்தகத்தில் இப்படி எழுதுகிறார்:

“தான் முகலாயர்களுடன் போர் புரியப் பிறந்தவன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை அவருக்கு. அந்நியர்களால் படை எடுத்து வெற்றி கொள்ளப்பட்டு அவர்கள் ஆட்சி புரிய நமது மதம், அடையாளம் ஆகியவற்றை இழந்து நிற்கிறோம் நாம். நம் உயிரையும் ஈந்து இந்நிலையை மாற்றுவோம் எனச் சூளுரைத்தது மட்டுமல்லாமல், ராஜேஸ்வரியின் முன்பு வெற்றி கொள்வேன் என ஆணையிட்டு, ‘தோரணா’ கோட்டையைத் தனதாக்கிக் கொண்டார் சிவாஜி மஹராஜ்”. மெதுவாக ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கும் பணியை சிவாஜி செம்மையாக செய்து வந்தார்.

1674ம் ஆண்டு, ஜூன் 6ம் தேதி, ராய்கட் கோட்டையில் பட்டாபிஷேகம் செய்து கொண்டார். சுமார் 5௦,௦0௦ பேர் கூடிய அந்த நிகழ்வில் மாமன்னர் சிவாஜிக்கு பல பட்டங்கள் வழங்கப்பட்டன. சத்ரபதி (தலை சிறந்த மன்னர்), சககர்தா (புதிய சாகப்தத்தை உருவாக்கியவர்), ஷத்ரிய குலவந்தாஸ் (ஷத்ரியர்களின் தலைவர்), ஹைந்தவ தர்மோதாரக் (ஹிந்து தர்மத்தை நிலை நிறுத்துபவர்) என்று பல பட்டங்கள் அளிக்கப்பட்டன.

சமர்த்த ராமதாசரின் சீடர்
சத்ரபதி சிவாஜி நீதியின் வழியில் தன் வாழ்க்கையைச் செலுத்தினார். அவர் சிறந்த ஆட்சியாளராகவும், சிறந்த ராஜதந்திரியாகவும் விளங்கினார். துறவியான சமர்த்த ராமதாசரின் வழிகாட்டலில் செயல்களைச் செய்துவந்தார். சிவாஜி தன்னுடைய நன்னடத்தை, திடமான சக்தி, தேசபக்தியினால் உயர்ந்தவராகக் கருதப்பட்டார். பெண்களுக்கு உரிய மரியாதையை அளித்தார். அவரது ஆட்சியில் அனைத்து மக்களும், அவரவர் சம்பிரதாயத்தில் நடக்க சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. ஹிந்து சாம்ராஜ்யம் நிறுவிய போதிலும், பிற மதங்களை அவர் வெறுக்கவோ, நசுக்கவோ இல்லை. எந்த ஜாதி, எந்த மதத்தவனானாலும் சரி, திறமை இருந்தால் முன்னுக்கு வரமுடியும், சிவாஜியின் ஆட்சியில். ஹிந்து ஸ்வராஜ்யம் அமைத்த அவரது படையில் இஸ்லாமியருக்கும் இடம் இருந்தது.

மராத்தியர்கள் சிவாஜியின் கட்டளைப்படி தக்காணப் பகுதிகள் முழுவதையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்து, ஹிந்த்வீ ஸ்வராஜ் கொள்கைப்படி ஆட்சி நடத்தினர். அதில்ஷாவின் பகுதிகளாக இருந்த வேலூர் கோட்டையும், செஞ்சி கோட்டையும் சிவாஜியால் கைப்பற்றப்பட்டவையே. பின்னர் தமது சகோதரர் வெங்கோஜியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி வெங்கோஜி ஆண்டு வந்த தஞ்சாவூர், மைசூர் பகுதிகளுடன் அவற்றை இணைத்தார். தக்காணப் பகுதிகள் முழுவதும் மொகலாயர்களையும், சுல்தான்களையும் விரட்டி ஹிந்து சுயராஜ்யத்தை அமைக்க வேண்டும் என்கிற சிவாஜியின் லட்சியம் நிறைவேறியது.

தனது குருநாதர் சமர்த்த ராமதாசரிடம் குருதட்சிணை­யாக ராஜ்யத்தைச் சமர்ப்பித்து, அவரின் பிரதிநிதியாக எண்ணியே ஆட்சி செய்து வந்தார். சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த சிவாஜி 1680-ம் ஆண்டு ஏப். 3-ம் தேதி தேதி காலமானார்.பல நூற்றாண்டுகளில் செய்ய செய்ய வேண்டிய சாதனைகளை வெறும் 5௦ ஆண்டுகளே உயிர் வாழ்ந்த சிவாஜி, செய்து முடித்தார். வெற்றியை மட்டுமே சிந்தையில் கொண்ட சத்ரபதி சிவாஜி, வீர நாயகர்களுக்குச் சிறந்த உதாரணம். எனவேதான் தேசபக்த நெஞ்சம் ஒவ்வொன்றிலும் சிவாஜி ஒரு லட்சிய புருஷராக விளங்கி வருகிறார்.

மங்கையர் மானம் காப்பதே வீரம்!
நடுங்கியபடி நின்றிருந்த அந்த 18 வயதுப் பெண்ணின் முகத்தில் பயம் அப்பி இருந்தது. “பயப்படாதே! உன் முகத்தை பர்தாவால் மூடிக் கொள்” என்று அந்த பெண்ணிடம் கூறினார் 19 வயது இளைஞர். அந்த இளைஞர் மராட்டிய வீரர் சிவாஜி. ஒரு படையெடுப்பில் கல்யாண் பகுதியை வென்ற மராட்டிய வீரர்கள், சுபேதார் முல்லா முகமதுவையும், அவரது மருமகளையும் கைது செய்து சிவாஜி முன் நிறுத்தியிருந்தனர். காடு, மலை, நதி கடந்து வந்த குதிரைகளுடன், சிப்பாய்களும் அங்கே நின்றிருந்தனர். அந்தப் பெண்ணுடன் நின்ற பெரியவர் நடுங்கிக் கொண்டிருந்தார். “இவர் பேரழகிதான். என் அம்மாவும் அழகுதான். என் அம்மா ஒருவேளை இந்த அழகைப் பெற்றிருந்தால் நான் மேலும் அழகாக இருந்திருப்பேன். பெரியவரே, நீங்கள் இந்தப் பெண்ணை பத்திரமாக அழைத்துப் போகலாம்” என கூறி அவர்களை விடுதலை செய்தார் சிவாஜி. கூடவே அந்தப் பெண்ணுக்கு சீதனங்களையும் கொடுத்து அனுப்பி வைத்தார்!

‘உங்கள் மனைவி அல்லாதவளை நீங்கள் சகோதரியாகவோ, தாயாகவோ நினைக்க வேண்டும்’ என்பதே சிவாஜி திரும்பத் திரும்பச் சொன்னது. தோல்வியுற்ற எதிரியின் மகளிரை அந்தப்புரத்தில் இருத்துவது முகலாய நடைமுறையாக இருந்தபோதுதான், இந்த மாபெரும் நாகரிகத்தைக் கடைபிடித்தார் சிவாஜி. பெண்களின் மாண்பைக் காப்பவரே வீரன் என்பதே அவரது நிலைப்பாடு. எனவேதான், சாவித்திரி தேசாய் என்ற மங்கை, தனது தளபதி சுகுஜி கெய்க்வாட்டால் பலாத்காரம் செய்யப்பட்டபோது, தனது தளபதி என்றும் பாராமல் தண்டித்தார் சிவாஜி. கெய்க்வாட்டின் கண்கள் குருடாக்கப்பட்டு ஆயுள் முழுதும் சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்திய கடற்படையின் தந்தை!
கோட்டைகளை நிர்மாணிப்பதும், கொத்தளங்களைச் சீரமைப்பதும் சிவாஜியின் பொழுதுபோக்கு. கொரில்லா யுத்த முறையைக் கையாள தேர்ச்சி பெற்ற போர்வீரர் அவர். யுத்த தந்திரம் என்பது அவரது அடிப்படை வியூகம். மிகச் சிறந்த புலனாய்வுக் குழுமம் இருந்தது மராட்டியப் பேரரசிடம். பிச்சைக்காரர்கள் போல வேடம் பூண்ட ஒற்றர்கள் நாடு முழுவதிலும் இருந்து உளவுத் தகவல்களை சிவாஜிக்குத் தெரிவித்து வந்தனர். அவரது மாபெரும் வெற்றிக்கு இந்த உளவுத் துறையும் ஒரு காரணம்.

‘சபாஸத்பகர்’ என்ற நூலின்படி, சிவாஜி சுமார் 1,260 யானைகள் கொண்ட படை ஒன்றையும் வைத்திருந்ததாக அறிய முடிகிறது. தவிர வலிமையான குதிரைப்படையும், காலாட்படையும் சிவாஜியின் ஆற்றலுக்கு சான்றாக அமைந்திருந்தன. விவசாயிகளுக்கு அவர் அளித்த பயிற்சி, அற்புதமான காலாட்படையை உருவாக்கியது. மராட்டியப் பேரரசின் பெரும்பாலான பகுதிகள் கடற்கரையாக இருந்தன. அவர் தனது தளபதி கான்ஹோஜி ஆங்ரேயின் கீழ் அதனை ஒரு வலிமையான கடற்படை கொண்டு பாதுகாத்து வந்தார். வெளிநாட்டுக் கடற்படைக் கப்பல்களை, குறிப்பாக போர்ச்சுகீ சியர்கள், பிரிட்டிஷாரின் கப்பல்களை மடக்கி வைப்பதில் அவர் வெற்றிகரமாக இருந்தார். மிகப் பெரிய முதல் கடற்படைத் தளத்தை உருவாக்குவதற்கான அவரின் தொலைநோக்குப் பார்வையால், சிவாஜி ‘இந்தியக் கடற்படையின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.

மிகச் சிறந்த நிர்வாகி
சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்த சத்ரபதி சிவாஜி, தனக்கு ஆலோசனை வழங்க 8 அமைச்சர்கள் கொண்ட ‘அஷ்டபிரதான்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். நிர்வாக முறையில் முன்னேற்றம் காண்பதற்காகவும், ஆட்சிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வரிவசூல் நடவடிக்கைக்காக பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார் சிவாஜி.

மேலும், ஆட்சி வசதிக்காகவும் வரிவசூல் நடவடிக்கைகளுக்காகவும் ஒவ்வொரு மாகாணத்தையும் பல பர்கானாக்களாகவும் தனது ஆளுகைக்கு உள்பட்ட பகுதிகளைப் பிரித்திருந்தார். ஆட்சியின் கடைசிப் பிரிவு கிராமமாகும். இதனை மேற்பார்வையிட படேல் என்ற அதிகாரி இருந்தார். இங்கு வரிவசூல் நடவடிக்கையானது நிலங்களைப் பிரித்து அவற்றின் தரத்திற்கேற்ப நிர்ணயிக்கப்பட்டது. வரியை காசாகவோ, பொருளாகவோ பெற்றுக் கொண்டனர். குடியானவர்களின் மொத்த நில வருவாயில் 5/2ல் பங்கு அரசைச் சார்ந்ததாகும். குடிமக்களிடமிருந்து நிலவரி அரசின் அதிகாரிகளால் நேரடியாக வசூலிக்கப்பட்டது. இது தவிர சவுத், சர்தேஸ்முகி எனும் இரு வரிகள் வசூலிக்கப்பட்டன.

பதுங்குவது பாய்வதற்கே!
சிவாஜியின் வளர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு, பீஜப்பூர் சுல்தான், சிவாஜியின் தந்தையைச் சிறை வைத்தார். இந்தச் சூழ்நிலையில் சிவாஜி, மொகலாயப் பேரரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘நாங்கள் தங்களுடன் இணைந்து பணிபுரிய விரும்புகிறோம்’ என்பதாக அதில் குறிப்பிட்டார். மொகலாய மன்னர் சாஜி, மற்றும் சிவாஜியின் வீரத்தை அறிந்திருந்ததால், இவர்கள் நம்முடன் இருப்பது நல்லது என நினைத்து சாஜியை விடுதலை செய்யச் செய்தார். மொகலாய அரசை பகைத்துக் கொள்ள முடியாமல், சாஜியை விடுவித்தார் பீஜப்பூர் சுல்தான். பாயவேண்டிய இடத்தில் பாய்ந்து, பதுங்கவேண்டிய இடத்தில் பதுங்கி, சீற வேண்டிய இடத்தில் புலிபோல் சீறினார். இதுவே சிவாஜியின் ராஜதந்திரம்.

ஒவ்வொரு ஆட்சியாளருக்கும் ஒரு தனிப்பட்ட தன்மை இருக்கும். சக்கரவர்த்தி சிவாஜியின் சிறப்புத்தன்மை, புதிது புதிதாக கோட்டைகள் கட்டி, எதிரிகளை நடுங்க வைப்பது! வருகட், பூஷண்கட், மஹிமாகட், வர்தன்கட், சதாசிவகட், மச்சேந்திரகட் என எத்தனை கோட்டைகள்! அது மட்டுமல்ல, எதிரிகள் வசமிருக்கும் கோட்டைகளைக் கைப்பற்றுவதும் அவருக்கு கைவந்த கலை. சிவாஜி எப்போதும் தன்முன் வரைபடத்தை விரித்து வைத்துக்கொண்டு, எந்தெந்தக் கோட்டைகளைப் பிடிக்கலாம் என ஆலோசனை செய்வார். அவருடைய திட்டமிடலால், அவருடைய ராஜ்யம் விரிவாகிக் கொண்டேபோனது. அவரது பேரரசு, தற்போதைய மகாராஷ்டிரம், கர்நாடகம் பகுதிகளில் பரவி, தமிழகத்தின் தஞ்சை வரை நீண்டிருந்தது.

புலிநகமும் சமரசமும்
பீஜப்பூர் சுல்தான் இறந்த பிறகு அவருடைய மகன் சிறுவனாக இருந்ததால், பீஜப்பூர் சுல்தானின் மனைவி சாயிபா அரசை கவனித்துவந்தார். ஒரு ஹிந்து பீஜப்பூர் மொகலாய அரசை எதிர்ப்பதைக் கண்டு அவமானப்பட்டாள். எனவே சிவாஜியைக் கொல்லத் திட்டம் தீட்டினாள். இத்திட்டத்தை அப்சல்கான், தான் செய்வதாக ஏற்றுக் கொண்டான். அப்சல்கானும் சிவாஜியும் சந்திக்க ஏற்பாடாகியது. அப்சல்கானின் உருவம் பெரியது; மாமிசமலை. சிவாஜியின் உருவமோ சிறியது. அப்சல்கான், சிவாஜி வந்ததும் கட்டித் தழுவிக் கொண்டான்; கட்டி இறுக்கினான்; சிவாஜி பிடியிலிருந்து விலக முயலும்போது தன் உடைவாளை எடுத்து விலாவில் பாய்ச்சினான். ஆனால், சிவாஜி தான் அணிந்திருந்த கவசத்தால் தப்பினார். அப்சல்கான் சற்றும் எதிர்பாரா விதமாக சிவாஜி விரல்களில் அணிந்திருந்த புலி நகங்களைக் கொண்டு அவனது வயிற்றில் குத்திக் கிழித்தார்.

பின்னர் பிரதாப்கர் (1659) யுத்தத்தில் பீஜப்பூர் படையை வென்றார்.சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யம் அமைத்து வருவதைத் தடுக்க வேண்டும் என்று முகலாய மன்னர் ஒளரங்கசீப் நினைத்தார். ஷெயிஷ்டகான் தலைமையில் படையை அனுப்பிவைத்தார். ஆனால், திருமண ஊர்வலம் போன்று வேஷமிட்டு கோட்டைக்குள் சென்று, அவர்கள் அயரும் நேரம் பார்த்து அவர்களை விரட்டியடித்தார் சிவாஜி. மேலும் எருதுகளின் கொம்புகளில் துணிப் பந்தங்கள் கட்டி அதில் தீ வைத்தனர். இரவில் அதனை முகலாயர்கள் சிவாஜியின் படை என்று எண்ணி மிரண்டு ஓடினர்.

எனினும், முகலாயரின் படைத்தளபதி ஜெய்சிங்குடன் போர் புரியாமல், நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற காரணத்தால் ஓர் ஒப்பந்தம் (1665) செய்து கொண்டார். ஜெய்சிங்கிடமே ஹிந்து ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார். இரு ஹிந்து மன்னர்கள் போரிடுவதால் சிந்தும் ரத்தம் ஹிந்துக்களின் ரத்தம் தானே என்று ஜெய்சிங்கிற்கு நினைவூட்டிய அவர், போரைத் தவிர்க்க சமரசம் செய்துகொண்டார். பிறகு, தில்லிக்கு (1666) விருந்தாளியாகச் சென்ற சிவாஜியும் அவரது மகன் சாம்பாஜியும் மொகலாய அரசால் நயவஞ்சகமாக சிறை வைக்கப்பட்டதும், அங்கிருந்து தந்திரமாக பழக்கூடையில் இருவரும் தப்பி வந்ததும் மாபெரும் சாகசங்கள்.

– முத்து விஜயன்