காஞ்சி பெரியவரும் ஆர்.எஸ்.எஸ்ஸும்

ஸ்ரீ குருஜி தனது தாயை இழந்த சோகத்தில் இருந்தபோது பெரியவருக்கு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி கடிதம் எழுதினார். அதற்குப் பதிலாக ஸ்வாமிகள் ஸ்ரீ குருஜிக்கு ஸம்ஸ்கிருதத்தில் மூன்று ஸ்லோகங்களை எழுதி அனுப்பினார். அதன் சாரம், ”பஞ்சபூதங்களால் ஆகிய உங்கள் தாயார் உடல் அழிந்திருக்கலாம். ஆனால் காலம் காலமாக பலகோடி மக்களை ஈன்று இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் பாரத அன்னைக்கு தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துள்ள உங்களுக்கு தாயை இழந்த சோகம் என்பதே கிடையாது” என்பதே. கடந்த 1975 ஜூன் இறுதியில் நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அத்தருணத்தில் பெரியவர் கலவையில் இருந்தார்.

ஒரு நண்பரின் திருமணத்தை உத்தேசித்து அவருடன் கலவைக்கு நானும் சென்றேன். என்னுடன் மதன்தாஸ் தேவி என்ற சங்க பிரச்சாரகரும் வந்தார். கலவையில் இருந்த சூழ்நிலையில் பெரியவரிடம் சில வார்த்தைகள் பேச இயலுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. பெரியவர் மீது இருந்த இடத்திற்கும் நாங்கள் நின்ற இடத்திற்கும் இடையில் குறைந்தது 50 அடிகள் இருக்கலாம். அவரது கவனம் எங்கள் மேல் திரும்பியது. பெரியவரின் அருகில் இருந்த ஸ்ரீகண்டன் “இவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். தேசத்தில் எமர்ஜென்சி என்று சொல்கிறார்கள்” என்றார். நெருக்கடி நிலை பற்றி என்னிடம் கேட்டறிந்த மகா பெரியவர், “உனக்கு ஒன்றும் அபாயம் இல்லையே?” என்று அக்கறையுடன் கேட்டார். அருகில் இருந்த மதன்தாஸ்ஜியை அறிமுகம் செய்தபோது, அவரது ‘தேவி’ என்ற குடும்ப பெயரையும் விசாரித்து தெரிந்துகொண்ட பின்னர், வலது கரத்தை உயரமாக உயர்த்தி எங்களை ஆசீர்வதித்தார். பஞ்சாபில் 1984 காலகட்டத்தில் பயங்கரவாதம் தலைதூக்கியது. அத்தருணத்தில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பிரச்சாரகர்கள் பஞ்சாப் சென்றனர்.

தமிழகத்திலிருந்து கணேஷ் என்பவர் செல்ல பணிக்கப்பட்டார். அவரை ‘புலி கணேஷ்’ என்று கூறுவர். சிறுவயதிலிருந்தே பெரியவரிடம் ஈடுபாடு கொண்ட அவர், பஞ்சாப் செல்லும் முன்னர் காஞ்சி சென்று பெரியவரின் ஆசியை பெற விரும்பினார். அவருடன் மராட்டி மொழி தெரிந்திருந்த பஞ்சாபகேசன் என்ற பிரச்சாரகரும் சென்றார். இருவரும் சென்றபோது தனது அணுக்கத் தொண்டர் மூலமாக அவர்கள் வந்த காரியம் என்ன என்று பெரியவர் விசாரித்தார். தான் பஞ்சாப் செல்ல இருப்பதைத் தெரிவித்த கணேஷ், அங்கு சிறப்பாக பணியாற்ற பெரியவரின் ஆசி தேவை என்று பணிவுடன் வேண்டினார். அப்போது பெரியவர் கையில் ஒரு மரக்குச்சி பசுமையான இலைகளுடன் இருந்தது. கணேஷின் தாய்மொழி மராட்டி என்று கேட்டு தெரிந்துகொண்டபின் கனிவுடன் தனது கையில் இருந்த குச்சியை காட்டி “இந்த இலைக்கு மராட்டியில் என்ன பெயர்?” என்று வினவினார். தாய்மொழி மராட்டியாக இருந்தாலும் கணேஷிற்கு அவ்வளவு பழக்கம் இல்லாததால் பதில் அளிக்கமுடியாமல் தயங்கினார். அருகில் இருந்த பஞ்சு ”இதன் தமிழ் பெயரைச் சொன்னால் நான் முயலுகிறேன்” என்றார். பெரியவரும் “இது அத்திமரக் கிளை, இலை” என்றார். பஞ்சு பளிச்சென ”இதற்கு மராட்டியில் அஞ்சீர் என்று பெயர்” என்றார். கணேஷை நோக்கிய பெரியவர், ”உனக்கு வேண்டியது கிடைத்துவிட்டதா?” என்றார்.
-ச. கோபாலன்