ஸ்டாலினுக்கு சவால்

தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் அளித்த பேட்டி ஒன்றில், தமிழகத்தில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது என கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1967ம் ஆண்டு, தி.மு.க முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்த பலத்தில் அல்ல. சுதந்திரா கட்சி மற்றும் சி.பி.எம் கட்சிகளினுடனான கூட்டணியின் காரணமாக. 2021ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே. 1967ல் இருந்து, தி.மு.க ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது. இப்படி பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும், நீங்கள் படுமோசமான தோல்வியை சந்தித்த தேர்தல்களும் உண்டு மு.க. ஸ்டாலின் அவர்களே. யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள் ஸ்டாலின். துணைப் பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலம் ஆகிவிட்டது.  மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில், பா.ஜ.க 2024ம் ஆண்டு தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும். தமிழக பா.ஜ.க கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் மு.க. ஸ்டாலின். கூட்டணி இல்லாமல் போட்டியிட தி.மு.க தயாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சவாலை நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் ஏற்பாரா ஸ்டாலின்? என சமூக ஊடகங்களில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.