24 மணி நேரத்தில் மத்திய அரசு அதிரடி; விசாரணைக்கு மும்பை விரைந்த அதிகாரி

தணிக்கை வாரியத்தில் லஞ்சம் வாங்குவதாக நடிகர் விஷால் கூறிய குற்றச்சாட்டை அடுத்து, உடனடியாக விசாரணை நடத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டதை அடுத்து, புதுடில்லியிலிருந்து மூத்த அதிகாரி, மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளார்.

நடிகர் விஷால் நடித்த மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படம் தொடர்பாக, தனது எக்ஸ் தளத்தில் நேற்று முன்தினம் ஒரு வீடியோ பதிவை அவர் வெளியிட்டிருந்தார்.

அதில், இந்த படத்தை தணிக்கை செய்வதற்காக, மும்பையில் உள்ள தணிக்கை அதிகாரிகளுக்கு, 6.5 லட்சம் ரூபாய் வரை, லஞ்சம் கொடுக்கும் நிலை ஏற்பட்டதாக வேதனை தெரிவித்து இருந்தார்.

ஜீஜா ராமதாஸ் என்பவரது மும்பை கோடக் மகேந்திரா வங்கிக் கணக்கிற்கு இரு தவணைகளாக அந்த பணத்தை, ராஜன் என்பவரது வங்கி கணக்கிலிருந்து அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டி இருந்தார். மேலும், பிரதமர் மற்றும் மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரை குறிப்பிட்டு, இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டிருந்தார். இந்நிலையில், நேற்று புதுடில்லியில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அதிரடியாக நடவடிக்கையில் இறங்கியது. இதுகுறித்து அந்த அமைச்சகம் தனது எக்ஸ் தளத்தில் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

மிக துரதிர்ஷ்டவசமான குற்றச்சாட்டு. மத்திய அரசு ஊழலுக்கு முற்றிலும் எதிரானது. சிறிய அளவிலான ஊழலைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாது. தவறு நடந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி.

புதுடில்லியிலிருந்து மூத்த அதிகாரி, உடனடியாக மும்பைக்கு தற்போதே அனுப்பி வைக்கப்படுகிறார். முழுமையான விசாரணை நடத்தி, நடந்த உண்மைகளை அவர் வெளிக் கொண்டு வருவார். இதுபோல தணிக்கை வாரியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவருமே, அது பற்றிய தகவல்களை அளித்து, அமைச்சகத்துக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் விஷாலின் குற்றச்சாட்டை அரசு தீவிரமாக கவனத்தில் எடுத்துள்ளது. இதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

அவர் குற்றச்சாட்டு வைத்து, 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே மத்திய அரசு அந்த புகார் மீது நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது. காரணம், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசின் மிக முக்கிய முழக்கமே, துளிகூட ஊழல் இருக்கக் கூடாது என்பதுதான்.

ஆதாரங்களை வைத்திருப்பதாகவும் விஷால் கூறுகிறார். எனவே நடவடிக்கை உறுதி.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.