மமதாவின் மமதைக்கு தடுப்பணையாக மாறும் பாஜக!

மேற்கு வங்கம் என்றாலே கம்யூனிஸ்ட்களின் கோட்டை என்று சொல்லிக்கொண்டிருந்த காலம் (1967-–2011) இருந்தது. குறிப்பாக 1977ஆம் ஆண்டு முதல் 2006 வரையிலும் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்று, 34 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக மேற்கு வங்கம் விளங்கியது.

2011ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான திருணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை வீழ்த்தி முதன்முறையாக ஆட்சியில் அமர்ந்தது. அதைத் தொடர்ந்து 2016ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலிலும் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 211 தொகுதிகளில் திருணமூல் காங்கிரஸ் வென்று தனிபெரும் கட்சியாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கு மமதாவின் அரசியல் தலைமை மட்டுமல்ல, மார்சிஸ்ட்களின் அடக்குமுறைகளும் காரணமாக இருந்தன.ஆனால், இந்தப் பத்தாண்டுகளில் தனது அடாவடித்தன செயல்பாடுகளால், மக்களின் அதிருப்தியை வெகுவாக சம்பாதித்துள்ள மமதா, இம்முறை நடைபெற உள்ள தேர்தலில் ஆட்சியைக் காக்கப் போராடுகிறார். அவருக்கு புதிய சவாலாக மாபெரும் எழுச்சியுடன் களம் காண்கிறது பாஜக. ஒரு காலத்தில் எதிரெதிர்த் துருவங்களில் அரசியல் நடத்தி, மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், இம்முறை பாஜகவுக்கும், திருணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான தேர்தல் யுத்தத்தை வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சில இடங்களிலேனும் வென்றாக வேண்டும் என்பதற்காக அவை பழைய பகையை மறந்து கைகோர்த்துள்ளன. ஆனால், இந்த மஹா ஜோட் கூட்டணியை மேற்கு வங்க மக்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

இந்த மூன்று அணிகள் தவிர, இந்திய ஒருங்கிணைந்த சோஷலிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சி போன்ற கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன. இவை வாக்குகளை சில தொகுதிகளில் பிரிக்க முடியும்; அவ்வளவே.
கடந்த 2016 தேர்தலில் திருணமூல் காங்கிரஸ் 44.91 சதவீதம் வாக்குகளுடன் 211 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 12.25 சதவீதம் வாக்குகளுடன் 44 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி 19.75 சதவீத வாக்குகளுடன் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன (அப்போதும் காங்கிரஸ்- இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன). அந்தத் தேர்தலில் பாஜக 10.16 சதவீதம் வாக்குகளுடன் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலின் போது பா.ஜ.க மாபெரும் எழுச்சியைக் கண்டது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. அந்தத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகள் 40.25 சதவீதம். அதன்மூலம், திருணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக தன்னை முன்னிறுத்திக் கொண்டது.

இடதுசாரிக் கட்சிகள்- காங்கிரஸ் கூட்டணி ஓரிடத்தில்கூட வெல்லவில்லை. திருணமூல் காங்கிரஸ் 24 தொகுதிகளில் வென்றது. மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய 33 ஆண்டுகால ஆட்சியின்போது மக்கள் அடைந்த வேதனைகளின் வடுக்களை அவர்கள் இன்னமும் மறக்கவில்லை என்பதை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் காட்டி வருகின்றன. கடந்த 2001ல் இருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்ற பாஜகவின் வாக்குவங்கி, தற்போது பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்றுள்ளதாகவே அரசியல் பார்வை யாளர்கள் கருதுகின்றனர்.

இம்முறை மேற்கு வங்கத்தில் திருணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தான் நேரடி மோதல் என்பதை மமதாவே ஒப்புக் கொண்டு விட்டார். அவரது தேர்தல் பிரசாரங்களில் பாஜகவை மட்டுமே வசை பாடுகிறார். தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவது போல மேற்கு வங்கத்திலும், இந்தப் பேரவைத் தேர்தலை மத்திய அரசின் அதிகாரபலத்துக்கும் மாநிலத்தின் சுயமரியாதைக்கும் இடையிலான தாக அவர் கட்டமைக்க முயல்கிறார். ஆனால், மேற்கு வங்க மக்கள் அதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மமதாவின் எதேச்சதிகாரம் பிடிக்காமல் அவரை விட்டு விலகி பாஜகவில் ஐக்கியமாகும் திருணமூல் கட்சியினரின் எண்ணிக்கை பெருகி வருகிறது. குறிப்பாக, திருணமூல் காங்கிரஸில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டதுடன் மமதாவுக்கு எதிரான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.

சுவேந்து அதிகாரியும் மமதா பானர்ஜியும் நந்திகிராம் தொகுதியில் மோதுகின்றனர். அங்கு மிகுந்த பின்னடைவில் இருக்கிறார் மாநில முதல்வர் மமதா. கடந்த 2011-ல் நந்திகிராம் தொகுதிக்குபட்ட சிங்கூரில் டாடா தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக சுவேந்து அதிகாரியுடன் இணைந்து களம் இறங்கி மமதா நடத்திய போராட்டங்கள் காரணமாகவே அந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சிபிஎம் கூட்டணி ஆட்சியை இழந்தது. அதுவே முதன்முறையாக திருணமூல் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கும் காரணமாக அமைந்தது.

2016-ல் சுவேந்து அதிகாரி, திருணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மமதாவின் அமைச்சரவையில் இடம் பெற்றதுடன், கட்சியில் மம்தாவுக்கு இணையான தலைவராக உருவெடுத்தார். காலப்போக்கில், சுவேந்து அதிகாரியின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் அவரைப் புறக்கணிக்கத் தொடங்கினார் மமதா. அதன் விளைவாக, அதிருப்தி அடைந்த சுவேந்து அதிகாரி, தேர்தல் நெருங்குகையில் அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்ததுடன், மேற்கு வங்க பாஜகவின் வெற்றிமுகமாக முன்னிறுத்தப்படுகிறார்.

ஏற்கனவே, மாநிலத் தலைவர்கள் திலீப் கோஷ், முகுல் ராய் போன்றோர் பாஜகவை நன்கு வளர்த்துள்ள சூழலில், கட்சியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்பவராக சுவேந்து அதிகாரியின் வருகை அமைந்திருக்கிறது. அவருடன் மேலும் பல அமைச்சர்களும் பேரவை உறுப்பினர்களும், மக்களவை உறுப்பினர்களும் திருணமூல்காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். முதல்வர் மமதா பானர்ஜியோ, மத்திய அரசு கொண்டுவந்த தேசிய குடியுரி
மைச் சட்டம், மூன்று வேளாண் சட்டங்கள் மீதான பலரது அதிருப்தி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு போன்றவை காரணமாக மத்திய அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளதால் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்கிறார்.

எனினும், அவருக்கு அவர் மீதே நம்பிக்கை இல்லை. எனவேதான், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாஜக தொண்டர்களால் தான் தாக்கப்பட்டதாகக் கூறி, இடது காலில் கட்டுப் போட்டுக் கொண்டு நாடகம்ஆடுகிறார். இதுதொடர்பாக பாஜக மீதான அவரது புகாரை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு அனுதாப அலையைக் கிளப்ப முயன்றார் மமதா. ஆனால், அவரது இந்த நாடகம் நகைச்சுவைக் காட்சியாக மாறிப்போனது.

மேற்கு வங்க முதல்வரின் மேடைப் பேச்சுகளிலும் திமுகவினரின் பேச்சுகள் போலவே இங்கிதம் இல்லை. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை வசை பாடுவதே மமதாவின் தேர்தல்பிரசாரமாக உள்ளது. தனது ஆட்சிக்காலத்தில் செய்த பணிகளைக் கூறி வாக்கு கேட்க அவரால் முடியவில்லை. எனவேதான், நந்திகிராமில் தனது வெற்றிக்கு உதவுமாறு பாஜகவைச் சேர்ந்த மாவட்ட பாஜக பொறுப்பாளர்களிடம் மம்தா பேசியிருக்கிறார். அந்தப் பேச்சு அடங்கிய ஒலிப்பதிவு வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.சென்ற தேர்தலில் 211 தொகுதிகளில் வென்ற திருணமூல் காங்கிரஸ் இம்முறை 50 தொகுதிகளில் வெல்வதே சவாலாக உள்ளது. எனவேதான் வெளிப்படையான சிறுபான்மையின ஆதரவுப் போக்கை மமதா முன்னிலைப்படுத்தி வருகிறார்.

ஆனால், அதுவே அவருக்கு மேலும் பாதகமாகி வருகிறது. அனைவருக்குமான வளர்ச்சி, தேசிய ஒருமைப்பாடு, மத்திய அரசுடன் இணக்கமான போக்கு, நாகரிக அரசியல், வங்க கலாசார மேன்மைஆகிவற்றை முன்னிலைப்படுத்தும் பாஜகவின் பிரசாரம், சுவாமி விவேகானந்தர், நேதாஜி, தாகூர் ஆகியோர் பிறந்த மண்ணில் நல்ல பலனைத் தரத் துவங்கிவிட்டது. தேர்தல் காற்று திசை திரும்புவதை புரிந்துகொண்ட முதல்வர் மமதா பானர்ஜி, இப்போது பாஜகவை வீழ்த்த மார்க்சிஸ்டுகளும் காங்கிரஸ் கட்சியினரும் தனக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார். இது, ஒருவகையில் தேர்தலுக்கு முன்னதாகவே அவர் தோல்வியை ஒப்புக் கொண்டதன் அடையாளமே.

மமதாவின் மமதை மிகுந்த செயல்களுக்கு ஒரே தடுப்பணை பாஜக என்பதை மேற்கு வங்க மக்களும் உணரத் துவங்கிவிட்டனர். ஒன்றுபட்ட பாரதத்தின் கலச்சாரச் செழுமை மிக்க மாநிலம் மேற்கு வங்கம் என்பதை நிலைநாட்ட அம்மாநில மக்கள் தயாராகி விட்டதையே, மோடி, ஷா, சுவேந்து அதிகாரி ஆகியோருக்கு கூடும் பெருவாரியான மக்கள் கூட்டம் காட்டுகிறது.