பீர் பாஷா பங்களா

கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம் பசவகல்யாணம் பகுதியில் அமைந்துள்ளது பீர் பாஷா பங்களா தர்கா. இங்கு இந்திய தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ) ஆய்வு நடத்தவேண்டும் என லிங்காயத்துக்கள் கூட்டமைப்பு மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் வலியுறுத்தியுள்ளனர். லிங்காயத்துகள் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் “பீர் பாஷா பங்களா தர்கா, லிங்காயத் சமயத்தை நிறுவியவரான 12ம் நூற்றாண்டை சேர்ந்த சமுக சீர்திருத்தவாதியான பசவேஸ்வராவின் புனித இடமாகும். இது ஒரு உண்மையான அனுபவ மண்டபம். உலகின் முதல் நாடாளுமன்றம் இந்த அனுபவ மண்டபம். இதுதான், தற்போது பீர் பாஷா தர்காவாக மாறியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. இந்த அனுபவ மண்டபத்திற்கு ஏ.எஸ்.ஐ உடனடியாக பாதுகாப்பு வழங்கவேண்டும். தர்காவை முழுமையாக ஆய்வுசெய்து அறிக்கை வெளியிடவேண்டும். அதனை மீட்டெடுத்து பாதுகாக்க மத்திய அரசு நிதி ஒதுக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர். மேலும், லிங்காயத்துகளுக்கான தூதுவர்கள் குழு, பசவகல்யாண தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஷரணு சலகர் தலைமையில் முதல்வரை சந்தித்து பேசி உரிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.