இந்து முன்னணி பிரமுகர், எஸ்ஐ மீது தாக்குதல் – நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர் கைது

திருநெல்வேலியில் இந்து முன்னணி பிரமுகர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய புகாரில் திருநெல்வேலி மாநகராட்சி திமுக கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி புதுப்பேட்டையை சேர்ந்த மாநகராட்சி 20-வது வார்டு திமுக கவுன்சிலர் ஷேக்மன்சூர் (42) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பேட்டை நகர இந்து முன்னணி துணைத் தலைவர் ஐயப்பன் என்பவருக்கும், பேட்டை செக்கடி பகுதியிலுள்ள இடம் தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் திருநெல்வேலி டவுன் பகுதியிலுள்ள டீக்கடையில் அவர்கள் இருவருக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவில் தகராறு ஏற்பட்டது.

அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில் அங்கிருந்த கம்பியால் ஷேக்மன்சூர் மற்றும் அவரது நண்பர் கனி ஆகிய இருவரும் ஐயப்பனை தாக்கியுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த பேட்டை காவல் நிலைய உதவிஆய்வாளர் செல்லதுரை இந்த மோதலை தடுத்துள்ளார். அப்போது அவரும் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் காயமடைந்த உதவி ஆய்வாளரும், ஐயப்பனும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் ஐயப்பன் தன்னை தாக்கியதாக ஷேக் மன்சூரும் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

4 பிரிவுகளில் வழக்கு: இது தொடர்பாக ஐயப்பன் கொடுத்த புகாரின்பேரில் ஷேக்மன்சூர், கனி ஆகியோர் மீது திருநெல்வேலி டவுன் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் காவல் உதவி ஆய்வாளரை தாக்கியது தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மாநகராட்சி கவுன்சிலர் ஷேக்மன்சூர், கனி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்து முன்னணி பிரமுகரையும், மோதலை தடுக்க சீருடையில் வந்திருந்த காவல் உதவி ஆய்வாளரையும், ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருவர் தாக்கி காயப்படுத்தியுள்ள சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.