கோவை போத்தனூரை சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் என்பவர் ஹிந்து முன்னணி அமைப்பின் உக்கடம் நகர துணைத் தலைவராக உள்ளார். இரு தினங்களுக்கு முன், இரவு போத்தனூர் சங்கம் வீதி அருகே இருசக்கர வாகனத்தில் அவர் சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் தாக்கப்பட்டு, காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போத்தனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான ராமகிருஷ்ணன் தேர்தல் பிரச்சார நாட்களில் தீவிரமாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலை கண்டித்தும், தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தலைமையில் ஹிந்து முன்னணி அமைப்பினரும் பிற ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ‘இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்’ என்றார் காடேஸ்வரா சி.சுப்ரமணியம். பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், காயமடைந்த ராமகிருஷ்ணனை கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘இதோபோன்று சில நாட்களுக்கு முன்பும் பா.ஜ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது சந்தேகங்களை எழுப்புகிறது’ என்றார்.