பா.ஜ.க பிரமுகர் படுகொலை

கடந்த 24ம் தேதி இரவு எட்டு மணியளவில், சென்னை சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில், மத்திய சென்னை பா.ஜ.க பட்டியலினப் பிரிவு தலைவர் பாலசந்தர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், தாங்கள் மறைந்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பாலசந்தரை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பாலசந்தர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததினால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் தேநீர் அருந்திக்கொண்டிருந்த நேரத்தில் இந்தக் கொலை நடந்துள்ளது. தப்பியோடிய கொலைக் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 5 தனிப்படை அமைத்து சென்னை பெருநகர ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வுசெய்து குற்றவாளிகளைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு பா.ஜ.க,வும் பல்வேறு ஹிந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம்: இங்கே எவருக்கும் பாதுகாப்பு இல்லை – திமுக அரசால் செயல் இழந்து நிற்கும் காவல்துறையால் சாமானிய மக்களுக்கு எந்தவித நன்மையும் விளையாத சூழல். மத்திய சென்னை மாவட்ட பட்டியல் இன அணித் தலைவர் சகோதரர் பாலசந்தர் அவர்களின் குடும்பத்தாருக்குப் பாரதிய ஜனதா கட்சி அரணாக இருக்கும். இளமையும், துடிப்பும் மிக்க எங்கள் சகோதரனைக் கொலை செய்தவர்கள் யார் என்பதை காவல்துறை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார்.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்: பா.ஜ.க பொறுப்பாளர் படுகொலை திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. மத்திய சென்னை மாவட்ட பட்டியலின பிரிவு மாவட்டத் தலைவர் பாலச்சந்திரன், அடையாளம் தெரியாத சில நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மக்கள் அச்சத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.