தஞ்சாவூர் மாணவி மதமாற்றத் தற்கொலை வழக்கில் நீதிகேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்த முயன்றனர் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பை சேர்ந்த மாணவர்கள். இதில் பங்கேற்ற ஏ.பி.வி.பி தேசிய பொதுச்செயலாளர் நிதி திரிபாதி, தேசிய செயலாளர் முத்து ராமலிங்கம் உள்ளிட்ட 36 பேரை தமிழக காவல்துறை தன் பலத்தை பிரயோகித்து கைது செய்தது. இதில் பல மாணவர்களது உடைகள் கிழிந்தன, பலருக்கும் காயம் ஏற்பட்டது. அப்போது பேசிய ஏ.பி.வி.பி தேசிய பொதுச்செயலாளர் நிதி திரிபாதி, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்த பிறகும் தமிழக அரசு முறையாக ஒத்துழைக்கவில்லை, கட்டாய மதமாற்ற அழுத்தத்தால் உயிரிழந்த மாணவிக்கு நீதி வழங்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார்.
அவர்கள் அனைவரையும் காவல்துறை இரவு முழுவதும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அமரவைத்தது. வாத பிரதிவாதங்கள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் நீண்டது. ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எதிர்ப்புக்கான காரணத்தை கேட்டபோது ‘இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி சகாய மேரி ஜாமீனில் வந்ததை வரவேற்க தி.மு.க எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் சென்றார். இதனை கண்டித்து தமிழக முதல்வர் முன் குரல் கொடுக்க முன் வந்தோம்’ என கைதான மாணவர்கள் தெரிவித்தனர். முடிவில் 36 மாணவர்களில் 3 பேர் மைனர் என்று விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 33 பேரும் 14 நாட்களுக்கு ரிமாண்ட் செய்யப்பட்டனர்.
பொதுவாக இதுபோன்ற போராட்டங்களின்போது கைது செய்து மாலையில் விடுவித்துவிடுவார்கள். அதுவும் இவர்கள் மாணவர்கள், அறவழியில் மட்டுமே போராடினார்கள், எந்த பொது சொத்துக்கும் சேதம் விளைவிக்கவில்லை, யாரையும் தாக்கவில்லை என்பதால் தமிழக அரசு இவர்கள் மீது சிறிதேனும் இரக்கம் காட்டியிருக்க வேண்டும். ஆனால், கல்நெஞ்சம் கொண்ட தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, நீதி கேட்டு அறவழியில் போராடிய ஏ.பி.வி.பி மாணவர்களை அடக்குமுறையை ஏவி கைது செய்து சிறையிலடைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் இந்த செயலுக்கு தேசமெங்கும் உள்ள மாணவ அமைப்புகள், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.