சரத் பவாரை அஜித் பவார் மீண்டும் சந்தித்ததால் பரபரப்பு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, அந்த கட்சியின் அதிருப்தி தலைவரும், மஹாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவாரும், அவரது ஆதரவாளர்களும், நேற்று மீண்டும் சந்தித்து பேச்சு நடத்தினார். இரண்டாக பிரிந்துள்ள கட்சியை ஒன்றிணைக்கும்படி அவரிடம், இவர்கள் வலியுறுத்தினர். மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் பிளவு ஏற்பட்டது. அந்த கட்சியின் மூத்த தலைவரும், சரத் பவாரின் உறவினருமான அஜித் பவார், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் ஆளும் கூட்டணியில் ஐக்கியமானார். அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது. அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் எட்டு பேருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது. இந்த பரபரப்பான சூழலில் சரத் பவாரை, அஜித் பவார், பிரபுல் படேல் உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என, அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அஜித் பவாரும், அவரது ஆதரவாளர்களும் மீண்டும் மும்பையில் சரத் பவாரை சந்தித்து நீண்ட நேரம் பேச்சு நடத்தினர். இந்த சந்திப்பிற்கு பின், பிரபுல் படேல் கூறியதாவது: சரத் பவார், எங்களின் தலைவர். எங்களின் அரசியல் வழிகாட்டியாக திகழ்கிறார். அவரிடம் ஆசி பெறவே, இங்கு வந்தோம். பிரிந்துள்ள கட்சியை மீண்டும் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்கும்படி அவரிடம் வலியுறுத்தினோம். நாங்கள் கூறியதை அமைதியாக அவர் கேட்டுக் கொண்டார். ஆனால், எங்கள் கோரிக்கைக்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர் மனதில் என்ன இருக்கிறது என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, தேசியவாத காங்கிரசின் செயல் தலைவரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே, எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு சென்றார்.