நேர்மையான எண்ணங்களுடன் செயல்படுங்கள்

கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசின் சீரிய நடவடிக்கைகளால் வடகிழக்கு மாநிலங்களில் நல்ல முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. எந்த மாநிலத்துக்குச் சென்று பணியாற்றினாலும், அம்மாநில மொழியை கற்று கொள்ளுங்கள், அது நீங்கள் மக்களுடன் பழக உதவியாக இருக்கும். நேர்மையான எண்ணங்களுடன் செயல்படுங்கள். உங்கள் பணியில் நீங்கள் சிறந்தவர்களாக விளங்க வேண்டும். என்னுடைய பணி அனுபவத்தில் கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. தமிழ் மொழியை கற்று கொள்ள முயற்சி செய்துவருகிறேன். தற்போது தமிழில் படிக்கிறேன். தமிழில் சரளமாக பேசுவதற்கான முயற்சியில் உள்ளேன். தமிழகம் சிறந்த இடம். இதன் மக்கள் சிறப்பானவர்கள். தமிழ் மொழியும், இலக்கியங்களும் மிகவும் பழமையானவை. பல்லாயிரம் ஆண்டு கலாச்சாரம், பண்பாடு தமிழகத்தில் உள்ளது. தமிழர்கள் எங்கு சென்றாலும் அவர்களது அடையாளத்துடனும் கலாச்சாரத்துடனும் இருப்பார்கள். ஆங்கிலேய ஆட்சியின்போது இங்கு வந்த மிஷனரிகள் தமிழகத்தில் பிரிவினை ஏற்படுத்தினர். காசி ராமேசுவரம் யாத்திரையை நிறுத்த முயற்சித்தனர். ஆங்காங்கு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் பாரத மக்கள் ஒற்றுமையின் பலத்தால் இணைந்துள்ளனர். தமிழகத்தின் கட்டடக்கலை மிகவும் அழகானது. ராமேஸ்வரம், மீனாட்சி கோயில்கள் போன்ற பண்டைய கோயில்கள் அனைத்தும் சிறப்புகளை கொண்டது” என தெரிவித்தார்.