கல்வி ஒளியேற்றும் மாணவர்

கொரோனா காலத்தில் பெரிய கல்வி நிலையங்களே செயல்பட முடியாமல் திணறும் நிலையிலும், இலவச வகுப்புகளின் மூலம் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி ஒளியேற்றி வருகிறார்கள் கல்லூரி மாணவரான மணிகண்டனும் அவரது நண்பர்களும். கோவை மாவட்டம் சரவணம்பட்டி பேரூராட்சியில் உள்ளது கந்தசாமி நகர். இந்தப் பகுதியில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள், கல்வியை இடையிலேயே நிறுத்திவிடுவார்கள். இந்தச் சூழலை மாற்ற நினைத்தார்கள் விவேகானந்த சேவா கேந்திர தொண்டர்கள். அந்தப் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா நடத்தி வந்த மணிகண்டன் தலைமையில் இலவச டியூசன் வகுப்புகள் தொடங்கின.”கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த வகுப்புகளால் மாணவர்களின் இடைநிற்றல் தற்போது நின்றுவிட்டது. பத்தாம் வகுப்பு வரை பயிலும் 25 மாணவர்கள் இப்போது நமது வகுப்புகளுக்கு வருகிறார்கள். மேலும் 15 பேர் தேர்ச்சி பெற்று மேல் வகுப்புகளுக்குச் சென்றுவிட்டார்கள்” என்று பெருமிதத்துடன் பேசுகிறார் மணிகண்டன்.அவருக்கு உதவியாக அவரது அம்மாவும், சாம்பவி என்ற பாலிடெக்னிக் மாணவியும் வகுப்பெடுக்கிறார்கள். “ஆர்.எஸ்.எஸ் தந்த பயிற்சி தான் இதற்கு அடிப்படை” என்கிறார் மணிகண்டன்
– அபாகி