அனைவருக்குமான மக்கள்தொகைக் கொள்கை

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நான்கு நாள் பணிக் குழு கூட்டம், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் டாக்டர். மோகன் பாகவத் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இதன் இறுதி நாளன்று அதன் பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹொசபலேசெய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வுகளும் ஆலோசனையும் நடத்தப்பட்டது. மத மாற்றம் மற்றும் அண்டை நாடுகளான வங்கதேசம் உள்ளிட்டவற்றில் இருந்து ஊடுருவல்கள் போன்றவை, நம் நாட்டின் மத ரீதியிலான மக்கள் தொகையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அண்டை நாட்டு ஊடுருவல்கள் காரணமாக மக்கள் சமநிலையின்மை வடக்கு பீகாரில் பூர்னியா மற்றும் கதிஹார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளது. இதேபோல பிற மாநிலங்களிலும் இது காணப்படுகிறது. எனவே, இந்த விஷயத்தை முழுமையாகவும் ஒற்றுமையாகவும் பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் அனைவருக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான தேசிய மக்கள்தொகைக் கொள்கையை உருவாக்க முடியும் என்று நாங்கள் தீர்மானித்துள்ளோம். நாக்பூரில் நடந்த விஜயதசமி விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு, சமூக நல்லிணக்கம், தாய்மொழியில் கல்வி கற்பது குறித்தும் பேசினார். உத்தரப் பிரதேசம் உள்பட சில மாநிலங்களில் உள்ள மதமாற்ற தடை சட்டத்தை, நாடு முழுதும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். மதமாற்றம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதன் வாயிலாக மதம் மாறியவர்கள், மீண்டும் ஹிந்து மதத்துக்கு திரும்பி வருகின்றனர். மதம் மாறுவோருக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படக் கூடாது” என கூறினார். மேலும், பிற மதங்களை ஏற்றுக்கொண்ட சமூகங்கள் பட்டியலிடப்பட்ட ஜாதி அந்தஸ்தைப் பெற வேண்டுமா என்பதை ஆராய முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவையும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.