மந்தமா? மந்தஹாசமா? பொருள் என்ன புரிகிறதா?

பொருளாதார வளர்ச்சி என்றும் ஒரே சீராக அமைந்ததில்லை. சறுக்கலும் ஏற்றமும் அதன் இயல்பு. இதைக்கொண்டு பார்க்கும் போது, பொருளாதார வீழ்ச்சி என்றென்றும் அதன் நிலையை அதே பக்கம் தொடராது என்பது புரியும். இதன் காரணங்களையும் இந்த தேக்கத்தின் வலி தொடரக்கூடிய காலத்தையும் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டின் உற்பத்தி வளர்ச்சி 2013க்குப் பின்னர் முதல்முறையாக தற்போது 5 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது.. 1984–85ல் இதே போல் குறைந்து, அந்த நிலை 1987–88 வரை தொடர்ந்து, இந்திய நாடு அன்னிய நாடுகளுக்குப் பணம் செலுத்துவதில் தவறக்கூடும் என்ற நிலை வந்தபோதுதான், முதன் முதல் நம் நாட்டு வணிகம் தாராளமாக்கப் பட்டது. Liberalisation என்றும் open economy என்றும் கூறப்பட்ட இந்த நடவடிக்கைகளால், மெதுவாகப் பொருளாதாரம் சூடு பிடிக்கத்தொடங்கியது. மறுபடியும் 2008ல் ஒரு மந்த நிலை.

நோய்

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தக்கூடிய வல்லமை கொண்ட முக்கிய கருவி வங்கிகள். இப்போதுள்ள நிலைக்கு இந்த வங்கிகளின் NPA அதாவது செயல்படாத சொத்துக்கள் ஒரு முக்கிய காரணம். ஆனால், இந்த NPAகள் ஒரே இரவில் அப்படி ஆகிவிடாது. பல வருடங்களாகக் கொடுக்கப்பட்ட கடன்கள், பல நேரங்களில் நிர்ப்பந்தங்களாலும், வாராக்கடனாகச் சேர்ந்து நின்றன.    இது தொடங்கி வைத்த ஒரு சுழற்சிதான், வங்கிகள் கைகளில் கடன் கொடுப்பதற்கு புழக்கம்  இல்லாமல் போக, கடன் கொடுப்பது குறைய, நிறுவனங்கள் தொழில் வளர்ச்சிக்கு நிதி கிடைக்காமல் தேங்கிய நிலை அடைய, உற்பத்தி குறைய…! ஒரு உதாரணம் – மோட்டார் வாகன நிறுவனங்கள். ரிசர்வ் வங்கி ரீபோ ரேட்டை குறைத்தபோது, அதனால் ஏற்படக்கூடிய குறைந்த வட்டி விகித மாற்றத்தை வங்கிகள் தங்கள் நுகர்வோருக்கு கொடுக்க மறுத்தன.இதனால் நுகர்வோர் தங்கள் பொருள் வாங்கும் தேவைக்கு வங்கியில் கடன் வாங்குவதை தவிர்த்தார்கள். இதனால் பொருட்களை சந்தையில் வாங்குபவர்கள் குறைய, தேங்கி நின்ற உற்பத்தியினால், நிறுவனங்கள் மேலும் உற்பத்தியைக் குறைத்தன.

காரணம், சீனா, அமெரிக்கா வணிகப் போட்டி. இது அவர்களை மட்டுமன்றி, இந்த நாடுகள் ஏற்றுமதி அல்லது    இறக்குமதி  செய்யும் அனைத்து நாடுகளையும் பதம் பார்த்தது. அதில் நம் நாடும் மாட்டிக்கொண்டது. உள் நாட்டிலும் விற்பனை சரி இல்லை, வர்த்தகப்போரினால் ஏற்றுமதியும் குறைய, பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி அடைந்தது.

இதைப்போன்ற ஒரு நிலையில் தான் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நன்மை தீமைகள் பற்றி வேண்டிய அளவு எல்லோரும் பேசித் தீர்த்து விட்டார்கள். இனி நமக்கு விவாதம் தேவை இல்லை. காரணம், இதுதான் இனி வணிக முறை என்று அனைவரும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஆனால் எந்த புதிய முறையும் அதனால் ஏற்படக்கூடிய பயனை முழுவதும் தருவதற்கு சில வருடங்கள் தேவை. அந்த வகையில், 2017ல் தொடங்கி முதல் இரண்டு வருடங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், இதனாலும் வணிகத்துறையில் பல இன்னல்களும், தடங்கல்களும் ஏற்பட்டு, பொருளாதார வீழ்ச்சியில் ஜிஎஸ்டி ஒரு சிறு பங்கு வகிக்கிறது.

இதனுடன் கை கோத்துக்கொண்டு வந்தது நோட்டுத் தடை. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் கருப்புப்  பணத்தை வெளியில் கொண்டு வருவது. சரி, இது எவ்வாறு பொருளாதாரத்தைப் பாதிக்கும்? கருப்புப்பணம் ஒரு இணையான பொருளாதாரத்தைத் தனியே நடத்தவல்லது. கருப்புப்பணம் மிக அதிகமாகப் பங்குபெறும் தொழில்கள், பங்கு துறை, ரியல் எஸ்டேட், திரைத்துறை, அரசியல், பயங்கரவாதம். இது தவறு என்று சொன்னாலும் கூட, இந்த பணம் செய்யும் சுழற்சி, ஒரு வகையில் பொருளாதாரத்தின் மீது தாக்கம் செலுத்தும். ஒரு சின்ன உதாரணம். ஒருவர் படம் பார்க்கச்செல்கிறார். ப்ளாக்கில் ரூ.500 கொடுத்து டிக்கட் வாங்குகிறார். டிக்கெட் விற்றவர், அந்தப் பணத்தில் உயர்தர ஐஸ்க்ரீம் ஒன்றைச் சாப்பிடுகிறார். ஐஸ்க்ரீம் விற்றவர், அந்தப்பணத்தில் ஒரு டெம்போ எடுத்து , பக்கத்தில் உள்ள மாலுக்குச் சென்று மேலும் சில ஐஸ்க்ரீம்கள் விற்கிறார். இவை எல்லாம் இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. ஆக, தவறாகப் பெறப்பட்ட ஒரு 500, சில மணி நேரத்தில் மூன்று முறை உபயோகிக்கப்பட்டு அதன் வாங்கும் திறன் 1,500 ஆக பெருகி நிற்கிறது. இது மட்டுமல்லாது, புதிய வியாபாரத்தையும் துவக்கி அதிலிருந்தும் பண சுழற்சியை ஆரம்பித்து வைக்கிறது.

இப்போது மற்றும் ஒரு உதாரணம். மேலே சொன்னதில் முதலாமவர், கருப்பு டிக்கெட் வாங்காமல், அந்தப்பணத்தை தன் பர்சில் சேமிப்பாக வைத்திருந்தார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது  ஐநூறு வெறும் ஐநூறாக மட்டுமே இருக்கும்.  ஆக நோட்டுத் தடையால் பொருளாதாரம் பின் தங்கிச் செல்லத் தொடங்கியது.

மருந்து

வங்கிகளைப் பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி இனி வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தை ரீபோ ரேட்டுடன் இணக்க வேண்டும். ஆக, இனி வரும் நாட்களில் வட்டி விகிதம் மிகவுமே குறைக்கப்படுவதை நாம் பார்க்க முடியும். தவிர, வங்கிகளுக்குத் தேவையான மூலதன நிதியை அரசாங்கம் தர உள்ளது. இதனால் வங்கிகளின் கைகளில் உள்ள நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் இருக்கும். அதேபோல் வாராக்கடன்கள் முழுவதும் சரியான முறையில் கணக்கிடப்பட்டு அவை கணக்கில் காட்டப்பட்டு விட்டன.

இனி வங்கிகளின் இருப்பு நிலைகளில் முன்னேற்றம் காணலாம். ஜிஎஸ்டியைப் பொறுத்தவரை, இனி வரும் காலங்களில் மற்ற நாடுகளில் உள்ளது போல் வரி விகிதம் குறைக்கப்பட்டு, ஒரு நாடு ஒரு வரி என்றாக வேண்டும். அவ்வாறு செய்தால், நம் நாட்டு உள்  வணிகம் மட்டுமின்றி, ஏற்றுமதி இறக்குமதி வணிகமும் நிச்சயமாக வலுப்படும். மாறுதல் ஒன்றே மாறாதது. ஆகவே, பொருளாதார நிலை மாறும். நம் நாட்டைப் பொறுத்த வரையில், முன்னேற்றம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அந்த முன்னேற்றத்தின் விகிதம் தான் இப்போது தொய்வடைந்திருக்கிறது.

 நாளையே நாம் பொருளாதார தேக்கத்திலிருந்து விடுபடுவோமோ என்று யோசித்தால், இன்னும் சில வருடங்கள் நாம் இந்த வலியை பொறுத்துக்கொள்ள வேண்டித்தான் இருக்கும் என்றே தோன்றுகிறது. தற்போது கொடுக்கப்பட்டுள்ள பொருளாதார உத்வேகங்கள் எந்த அளவிற்கு மாற்றத்தை கொடுக்க வல்லது என்பது சில மாதங்களில் புரிந்துவிடும். அதன் பின் வேறு மாற்றங்கள் தேவையா என்பதை அரசாங்கம் முடிவு செய்யும் எனும் நம்பிக்கையில், ”நம் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்”