நாடு அதனை முதலில் நாடு

தென் கிழக்கு ஆசிய நாடுகள் பத்தும் அவற்றுடன் வாணிபம் செய்யும் சீனா, ஆஸ்திரேலியா போன்ற 5 நாடுகளும் இணைந்து ஒரு விரிவான பிராந்திய வணிக ஒத்துழைப்பு முயற்சிகளை 2012ஆம் ஆண்டு முதலே மேற்கொண்டு வருகின்றன.

பொருளாதார ஒப்பந்தம்

ரீஜினல் காம்ப்ரஹென்சிவ்  எகனாமிக் பார்ட்னெர்ஷிப் (ஆர் சி ஈ பி –   R C E P) என்ற ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள 15 நாடுகள் உலகின் ஜனத்தொகையில் ஏறத்தாழ 50 சதவீதத்தையும் உற்பத்தியில் சுமார் 37 சதவீதத்தையும் கொண்டவை. இந்த விரிவான பன்னாட்டு ஒப்பந்தம் வழியாக பங்கு கொள்ளும் நாடுகள் தங்கள் நாட்டு  சந்தைகளை  திறந்து விட்டிருக்கின்றன. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் இறக்குமதி விதிகளை அறவே நீக்கியும் பெருமளவு குறைத்தும் தங்கள் உற்பத்திப் பொருள்களை பகிர்ந்து கொள்கின்றன. வட அமெரிக்க நாடுகளும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் போலவே கூட்டுறவின் மூலம் ஆசிய நாடுகளும் வர்த்தக பேரத்தில் வலிமையுடன் போட்டிகளை சமாளிக்க முடியும்.

கடந்து வந்த பாதை

சென்ற ஏழு வருடங்களாக ஆர் சி ஈ பி  மெல்ல மெல்ல முன்னேறி வருகின்றது என்பதில் ஐயம் இல்லை. இன்று முன்னேறிய சீனா, தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகியவையும் பொருளாதாரமும் வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து போன்ற வளரும் நாடுகளும் பயன் பெற்று வருகின்றன. ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் பாரத நாடும் வாய்ப்புகளையும் கூர்ந்து கவனித்து வருகின்றது. 2014ல் ஆட்சிப்பொறுப்பை ஏற்றத்தில் இருந்தே, நரேந்திர மோடி ‘ கீழை நாடுகளை நோக்கிய பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றார். இரண்டாம் முறை வந்தவுடன் மேற்கொண்டு முயற்சிகளை தொடர்கிறார். இந்த பின்னணியில் தான் சென்ற மாதம் தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில் நடந்த ஆர் சி ஈ பி கூட்டத்தைக் கவனிக்க வேண்டும்.

ஆதரவும் எதிர்ப்பும்

ஆர் சி ஈ பி  குறித்து நம் நாட்டு பொருளாதார – அரசியல் வல்லுனர்களிடம் இருவித கருத்துக்கள் உள்ளன. ஒப்பந்தத்தை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

(1) நம் நாட்டு பொருட்களுக்கு ஜப்பான் தொடங்கி ஆஸ்திரேலியா – நியூசிலாந்து வரை பெரிய சந்தை திறக்கப்படும்.

(2) நம் நாட்டு சேவைத் துறைகள்- வங்கி, தகவல்தொழில் நுட்பம், தொலைபேசி, கால் சென்டர் போன்றவை ஏற்றம் பெறும்.

(3) அயல் நாட்டவரை இங்கு தொழில் தொடங்க அனுமதித்து அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப் பெறச் செய்யலாம்.

ஆர் எஸ் எஸ் அமைப்பினால் ஊக்கம் பெறறவர்கள் வழி நடத்தும் சுதேசி  ஜாக்ரண் மஞ்ச், பாரதீய கிசான் சங்கம், லகு உத்யோக பாரதி (சிறு குறு தொழில் முனைவோர் அமைப்பு) போன்ற அமைப்புகள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். குறிப்பாக சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் துணை நிறுவனத் தலைவர் அஸ்வனி மகாஜன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்:

கடந்த காலத்தில் நாம் ஆசியான் நாடுகளுடனும், சீனாவுடனும் ஏற்படுத்திக் கொண்ட இரு தரப்பு தாராள வணிக ஒப்பந்தங்களின் காரணமாக நாம் பெற்றதை விட இழந்தது அதிகம். இறக்குமதி அதிகமாகி, நாம் அயல்நாட்டவருக்கு கொடுக்க வேண்டிய நிகர தொகை மூன்று மடங்கு அதிகரித்து விட்டது.

அதேபோல் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்கள் அயல்நாட்டவருக்கே சாதகமாக அமைந்தன. அவை நமக்கு பெரும் வட்டி இழப்பை ஏற்படுத்தின. அக்காரணங்களினால் மோடி அரசு அந்த ஒப்பந்தங்களை முறித்துக் கொள்வதற்கு எதிர்த் தரப்பினருக்கு பெருத்த நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியதாகியது.

நியூ சிலாந்து நாட்டின் பால் பவுடர் கிலோ ரூ.180- / ௧90 என்ற அளவில் இருக்கையில், நம் நாட்டில் அது குறைந்தது ரூ.290 என்றிருக்கிறது. இறக்குமதி துர்வையே இல்லாமல் அது தேசத்திற்குள் வந்திருந்தால் உள்நாட்டு பால் பண்ணைத் தொழில் சர்வ நாசத்தை சந்தித்திருக்கும்.

செயலில் காட்டணும் நாட்டுப்பற்று

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாக்வத்ஜியும் சென்ற மாதம் விஜயதசமி பேரூரையில், நாட்டு நலனுக்கு முன்னுரிமை அளிக்கப் பட வேண்டும் என்றார், நாட்டு நலன் நாடுவோர் பலரும் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே இத்தகைய கருத்துக்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

மோடி திறந்த மனத்துடன் அணுகி இரு தரப்பு வாதங்களையும் சீர் தூக்கிப் பார்த்து இன்றுள்ள நிலையில் நமக்கு ஏற்ற அம்சங்கள் இடம்பெறும் வரையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வழியில்லை என்று உறுதியாக எடுத்துரைத்து விட்டு வந்திருக்கிறார். அடிப்படையில் இதே பள்ளியின் மாணாக்கர் தானே மோடி?