விண்ணில் உயர்ந்தது ரபேல், மண்ணில் சரிந்தது குடும்பம்!

ரபேலுக்கு தீர்வு – ராகுலுக்கு சாட்டை

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் – ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

எதற்காக  வள்ளுவர் இதை 2200 ஆண்டுகளுக்கு முன் சொன்னார் என்று தெரியவில்லை!

திரும்பப் பெறமுடியாதது இரண்டு என்பது நமது முன்னோர் வாக்கு! ஒன்று நம் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தை! இரண்டு, ஓடிப்போன காலம், மறைந்து போன நேரம், இழந்து விட்ட இளமை! தினசரி தெருவில் நடக்கும் சண்டைகளில், ”தடித்தவார்த்தை” பேசினான் என்பதற்காக ஒரு தட்டு தட்டினேன் என சொல்லக் கேட்டிருக்கிறோம். ”வார்த்தை முற்றி” கை கலப்பு ஏற்பட்டது என செய்திகள் பார்த்திருக்கிறோம்!

இத்தனை பீடிகைகளும் இக்கட்டுரைக்கு முன்னோட்டம் தான்! காங்கிரசின் முன்னாள் இளம் தலைவர் ராகுல் காந்தி உள்நோக்கத்தோடு உளறியதை, பாரத நாட்டின் உச்ச நீதிமன்றம்    இன்று  கண்டித்திருக்கிறது, குட்டுவைத்திருக்கிறது. ”இனி ஓழுங்காக இரு” என எச்சரித்திருக்கிறது.

இதெல்லாம் சொல்லிவிட்டால் ”சுட்ட வார்த்தை, – கெட்ட வார்த்தை-,  பட்டகாயம்   ”சரியாகி விடுமா என்றால் சரியாகாது. அதற்கு அது என்ன விஷயம் என்பதை பார்த்து விடுவோமா?

‘ரபேல் விமான பேர ஊழல்” என புனைவான குற்றச்சாட்டு கூறி ஊர்வலம் வந்த ஒரு உதவாக்கரை விஷயத்தை விஜயபாரதத்தில் நான் ஏற்கனவே உங்களுடன் விவாதித்திருக்கிறேன். ஆனாலும் ஒரு வருடம் ஓடிவிட்டதால் ஒரு சின்ன ”ரீகேப்”  – மிகவும் அதிமுக்கியமான – சரித்திர ரீல் டிவி மெகா தொடர்களிலேயே  ”ரீகேப்” போடும்போது நாம் போடக்கூடாதா?

பிரதமர் மோடியின் ஆட்சியில் முதல் 5 ஆண்டுகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் கண்டுபிடிக்க முயன்று தோல்வியடைந்த விரக்தி. UPA I + UPA IIல் நடந்த அத்தனை பெரும் பெரும் டீல்களில் ”பங்கு” பெற்று ”உண்டுதிளைத்த”  ராகுல் & கோ ரபேலில் ஒன்றும் கிடைக்காமல் போன விரக்தி! தாங்கள் ஆட்சியில் இருந்தபோதே, சஞ்சய் கோத்தாரி என்ற சாதாரண டெல்லி தெரு கார் புரோக்கருக்கு ரபேல் கான்ட்ராக்டை பெற்றுத்தந்து ”பினாமி முதலாளி” ஆக முயன்ற தோல்வியின் விரக்தி!

இதோடு கூட ‘என் அப்பனை ”போபர்ஸில்” மாட்டிவிட்டாயே! இரு இரு! உன்னை ரபேலில் மாட்டி விடுகிறேன்’ என்று ஒரு வன்மம்! இதன் உச்சகட்டமாக ”செளகிதார் சோர் ஹை” கோஷத்துடன் கடந்த ஆண்டு ஜூனில் ராகுல் காந்தி பிரதமர் மோடி மீதும் பாஜக அரசு மீதும் ஒரு ”காந்தர்வ யுத்தம் வளத்தை துவக்கினார். (கந்தர்வர்கள் மறைந்திருன்று மாயாஜால யுத்தம் செய்வார்கள்) பாஜக மீது வன்மம் பாராட்டிய அத்தனை ஊடகங்களும் ”ஊதுகுழல் எழுத்து நாயனம் வாசித்தது.”

இதை தேர்தல் கோஷமாக்கி, பாஜக என்ற மதயானையின் வேகத்தை கட்டுப்படுத்திய மாவீரனாக ராகுல் சித்தரிக்கப்பட்டார். பிரெஞ்சு அரசாங்கத்தையும் ஊழல்வாதிகள் என்றார்.     அதன் முன்னாள் ஜனாதிபதியை சாட்சிக்கு அழைத்தார். ஊரே ரணகளப்பட்டது. காங்கிரஸ் ராகுல் தலைமையில் மீண்டும் எழுச்சி பெற்றுவிட்டதாக ஊடகங்கள் எழுதின.

பலவீனமாகிப்போன விமானப்படையை பலப்படுத்துவதா? புனையப்பட்ட ”பொடிசுகளின்” போலிக்குற்றச்சாட்டுக்கு பதில் சொல்வதா? அண்டைநாடுகளின் அச்சுறுத்தலை, அபாயத்தை தவிர்க்க, இப்படி அபாண்டங்களை சொல்லி ரபேல் விமான வருகையை தாமதப்படுத்துவதா என்று கலங்குவதா? என்று எண்ணியபோது சுப்ரீம் கோர்ட் ராகுலுக்கு ”மரண அடி  கொடுத்தது.”

அவருக்கு சாதகமான அவருடைய ஆட்சியில் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி, பிரஷாந்த் பூஷன் என்ற குழுவை வைத்து கேஸ் போட வைத்து கைகளால் ராகுலின் முகத்தில் அறைந்தது. ரபேல் ஒப்பந்தம் சரியானது. ஊழல் குற்றச்சாட்டு பொய்யானது என ராகுலை போட்டுத் தள்ளியது!

அறிவீனர்கள் அடிவாங்கினாலும் அலட்டலை நிறுத்த மாட்டார்கள். அதற்குத்தான் அன்று அறைந்த சப்ரீம் கோர்ட் இன்று ஓங்கி ஒரு குட்டுவைத்து ”அடக்கமாக இரு” என அறிவுரை நல்கி வழக்கை முடித்துவைத்தது!

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். உண்மை ஊர்வலம் வருவதற்குள் பொய் உலகை வலம் வந்துவிடும் என்பது சான்றோர் வாக்கல்லவா?

தாயைப்பழித்தவனை தண்டிப்பது எப்பபடி? அந்த வார்த்தையின் காயங்களுக்கு தண்டனை தீர்வாகிட முடியுமா? வாயைக் கிழிப்பது தான் மனக்காயத்துக்கு மருந்து என்றால் அது அரபு நாடுகளில் மட்டுமே அல்லவா இருக்கும்?

அப்படியானால் ‘‘ரபேல் விமான ஒப்பந்தத்தில் நேரடியாக, மறைமுகமாக, பேச்சுவார்த்தை குழுவில் ஊழல் ஏதுமில்லை. எனவே அதை எதிர்த்து மனுவை, புகாரை தள்ளுபடி செய்கிறேன்” என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு என்ன பலன்?

பொய்க்குற்றம் சாட்டிய ராகுல் காந்தியையும் காங்கிரசையும் எந்த தண்டனையும் அல்லது கண்டனம் இல்லாமல் நழுவவிட்டது சரியா? இந்த குற்றச்சாட்டுகளை வைத்து ராகுலை பாராட்டி பாகிஸ்தான் பத்திரிகை எழுதியதே! இதுதான் காங்கிரசின் தேசபக்தியா? நாட்டின் தன்மானத்துக்கு தலைகுனிவு வந்தது. பாதுகாப்பை பலப்படுத்துதல் தள்ளிப்போனது. பாஜக பழிக்குள்ளாக்கப்பட்டது. இதெல்லாம் ”மனுவை தள்ளுபடி செய்து விட்டால்” மறைந்து போகுமா?

இந்த பழிகளை துடைக்க ராகுல் காந்தியை நாம் பழைய காலமுறைகள் போல தீக்குளிக்கச் சொல்லவில்லை. ஆனால் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டை அவமதித்த குற்றத்திற்காக, கோர்ட் பெரிய மனது கொண்டு, கண்டனம் மட்டும் தெரிவித்து விடுவித்து இருக்கலாம்.

ஆனால் பொய் எனத் தெரிந்தும் 130 கோடி மக்களின் தலைவனை, ”திருடன்” என (தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக) அபாண்டம் சொன்ன நபர்களை பாரத நாட்டு மக்கள் ”சும்மா விடத்தயாரில்லை. அரசியல் லாபங்களுக்காக நெஞ்சில்  ஈட்டி பாய்ச்சும் அயோக்கியர்களுக்கு பாடம் புகட்டியே ஆகவேண்டும்.

கோர்ட் தீர்ப்பு எதுவாகவும் இருந்து விட்டு போகட்டும். பிரதமரை அவமதித்த குற்றத்திற்காக, பொய், போலி, புனைசுருட்டு செய்தியை பரப்பியதற்காக, ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப்ரியங்கா வாத்ரா, ராபர்ட வாத்ரா குடும்பமே நாட்டு மக்களிடம் வீடியோ மூலமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தேர்தல் தீர்ப்புகள் தான் இதற்கு தீர்வு. அதுவே போதும் என்பது மிதவாதிகளின் எண்ணமாக இருக்கலாம். ஆனால், மன உளைச்சலுக்கு மன்னிப்புகள் மருந்தாகிவிடாது என்றாலும், இந்த காங்கிரஸ் கும்பல் குற்றம் சுமத்தும் முன்பு 100 தடவை சிந்திப்பதற்காவது அவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்துவதே நாட்டின் பாதுகாப்புக்கு நல்லது. அதுவே மற்றகட்சிகளின் ”ராகுல் காந்திகளுக்கு” பாடமாகவும் அமையும்.