ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டுப் பாதை வழியே ஒரு யாத்ரிகர் நடந்து போய்க் கொண்டிருந்தார். திடீரென்று மூன்று கொள்ளைக்காரர்கள் அவர் முன் வந்து நின்றார்கள். அவருடைய பணத்தை எல்லாம் பறித்துக் கொண்டார்கள்.
ஒரு கொள்ளைக்காரன் சொன்னான்: “இந்த ஆளை உயிரோடு விட்டு வைப்பது நமக்கு ஆபத்து, இவனை இங்கேயே கொன்று விடுவோம்”. இப்படிக் கூறியபடியே தன்னுடைய இடுப்பில் இருந்து ஒரு கத்தியை எடுத்தான். அப்போது இன்னொரு.கொள்ளைக்காரன் சொன்னான்: “ இவனைக் கொல்ல வேண்டாம். கொன்றால் அந்தப் பாவம் நம்மை சேரும். அதனால் இவனை ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விடுவோம். ஏதாவது காட்டு மிருகம் வந்து அவனை கடித்துக் குதறி விடும். இவனால் வீடு திரும்ப முடியாமல் போகும்”.
சரி என்று யாத்ரிகரை ஒரு மரத்தில் கட்டிப் போட்டார்கள். பிறகு மூன்று கொள்ளையர்களும் ஓடிப் போய்விட்டார்கள். சிறிது நேரமாயிற்று. அந்த மூன்றாவது கொள்ளைக்காரன் திரும்பி வந்தான். இவருடைய கட்டுகளை அவிழ்த்து விட்டான். “ஐயா, கவலைப்படாதீங்க நான் உங்க ஊருக்குப் போகிற பாதையில் பத்திரமாக உங்களை கொண்டு போய் சேர்த்து விடுகிறேன்” என்று சொல்லி யாத்ரிகரை அந்த கொள்ளைக்காரன் பத்திரமாக அழைத்துச் சென்று அவருடைய ஊருக்குப் போகிற வழியை காட்டினான்.அவரும் களைப்புடன் நடந்துபோய் தன்னுடைய ஊரை அடைந்தார். தன்னுடைய வீட்டில் நுழைந்தார். அங்கு அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அவரிடமிருந்து கொள்ளக்காரர்கள் பறித்துக் கொண்ட பணம் முழுவதும் அப்படியே வீட்டில் கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்தது. அதனுடன் ஒரு கடிதம் இருந்தது. யாத்திரிகர் அந்த கடிதத்தை எடுத்துப் படித்தார். அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:
“மூன்று கொள்ளைக்காரர்கள் போலத்தான் நம்முடைய மூன்று குணங்கள். சத்வம், ரஜஸ், தமஸ் என்று அந்த மூன்று குணங்களுக்கும் பெயர். தமஸ் நம்மை அழிக்க முயற்சிக்கும். ரஜஸ் நம்மை வன்முறையில் சிக்க வைத்து வேடிக்கை பார்க்கும். சத்வம் நம் வாழ்க்கையை வளமாக்குவதுடன் நாம் அடையவேண்டிய லட்சியமான மோட்சத்தை (வீட்டை) அடைய நமக்கு சரியான பாதை காட்டி உதவி செய்யும்.”
கடிதத்தை படித்த யாத்ரிகருக்கு விஷயம் புரிந்துவிட்டது. வந்தவர்கள் கொள்ளைக்காரர்கள் அல்ல. தவம் செய்த முனிவர்கள். தனக்கு உபதேசிக்கத் தான் இப்படி நாடகம் ஆடினார்கள் என்று அவர் உணர்ந்தார். காடு இருந்த திசை நோக்கி அந்த யாத்ரிகர் தன் இரு கை கூப்பி வணங்கினார்