மாமல்லபுரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது

பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் நேற்ற முன்தினம் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் மாமல்லபுரம் கலைசசிற்பங்கள் அனைத்தும் அழகுப்படுத்தப்பட்டு புதுப்பொலிவுகள் பெற்றன.
நேற்று முன் தினம் மாலை 3 மணி முதல் சுற்றுலா பயணிகள் அங்கு குவியத் தொடங்கினர். வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம், கடற்கரை கோவில் வளாகம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கடற்கரை கோவிலுக்கு சென்ற பயணிகள் அங்கு அகற்றிக் கொண்டிருந்த பிரதமர்-சீன அதிபர் சந்திப்பு நிகழ்வு அரங்குகளை ஆச்சரியத்துடன் கண்டனர். நுழைவிட பகுதி, புத்தர் சிலை, வாழை உள்ளிட்ட அலங்காரம், ஐந்து ரதசாலை, பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஆன அலங்கார வளைவு ஆகியவற்றின் முன்பு சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் ‘செல்பி’எடுத்து மகிழ்ந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று காலை முதலே மாமல்லபுரத்தில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதிய வண்ணம் இருந்தன. மூடப்பட்டிருந்த கடைகளும் படிப்படியாக திறக்கப்பட்டன. ஓட்டல்களும் வழக்கம் போல செயல்பட்டன. நேற்று காலை முதல் கடற்கரை கோவில், ஐந்து ரதத்தை பார்ப்பதற்காக நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. அங்கும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, குடைவரைக்கோவில் ஆகிய இடங்களில் திரண்டனர் ஆயிரக்கணக்கான மக்கள். கூட்டம் அலை மோதியதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.