வடகிழக்கு மாநிலங்கள் அருகே, ஒரு கிறிஸ்தவ நாட்டை உருவாக்கும் முயற்சி

தேசிய புலனாய்வு முகமையால், பாரதத்திற்கு எதிராக சதி செய்ததாகக் கூறி, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆறு பேரும், ஒரு அமெரிக்கரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சுற்றுலா விசா மூலம் பாரதத்திற்குள் நுழைந்து, முறையான அனுமதியின்றி மிசோரம் மாநிலத்திற்கு சென்றுள்ளார்கள். அங்கிருந்து சட்டவிரோதமாக மியான்மருக்குள் நுழைந்து, அங்குள்ள ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கு (Ethnic Armed Groups) ட்ரோன் போர்முறை (Drone Warfare) மற்றும் ஆயுதங்களைக் கையாளுவது குறித்த பயிற்சிகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பாவிலிருந்து பெரிய அளவிலான ட்ரோன்களைப் பாரதம் வழியாக, மியான்மருக்குக் கடத்தியதாகவும், இவை பாரதத்திற்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களுக்கு உதவ கூடும் என்றும் என்.ஐ.ஏ. சந்தேகிக்கிறது. கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் மேத்யூ ஆரோன் வான் டைக் (Matthew Aaron Van Dyke). இவர் ஒரு முன்னாள் ராணுவ ஒப்பந்ததாரர் மற்றும் Sons of Liberty International (SOLI) என்ற ராணுவ ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன்மூலம், உலகெங்கிலும் உள்ள பயங்கரவாத குழுக்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ராணுவப் பயிற்சிகளை அளிப்பவர் என்று சொல்லப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் மூலமாக, தெற்காசியாவில் ‘ஸோ இன’ மக்களைக் கொண்ட ஒரு கிறிஸ்துவ நாட்டை உருவாக்க திட்டங்கள் தீட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மியான்மர், பங்களாதேஷ் மற்றும் பாரதத்தின் சில பகுதிகளை உள்ளடக்கி, ஸோ மக்கள் வசிக்கும் ஒரு கிறிஸ்துவ நாட்டை உருவாக்குவதை ஊக்குவிக்கும் ஒரு நீண்டகாலத் திட்டம் இருப்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.
இந்தப் பிராந்தியத்தில் கிழக்கு திமோரைப் போன்ற ஒரு கிறிஸ்துவ நாட்டை உருவாக்க மேற்கத்திய சக்திகள், சதி செய்வதாக வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா சூசகமாக முன்பு கூறியிருந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த இழிவான திட்டத்திற்காக, அவர்கள் குக்கி-சின் தேசிய முன்னணி (KNF) மற்றும் அஸ்ஸாமின் ஐக்கிய விடுதலை முன்னணியின் (ULFA) முக்கிய சூத்திரதாரியான பரேஷ் பருவா உட்பட பல பிராந்திய கிளர்ச்சிக் குழுக்களுடன் ரகசியமாகக் கைகோர்த்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ச்சியாக கலவரம் வெடிப்பதற்கு முக்கியமான காரணம், குக்கி தேசிய ராணுவம், குக்கி தேசிய முன்னணி மற்றும் குக்கி விடுதலை ராணுவம் ஆகிய அமைப்புகளின் கீழ் செயல்படும் குக்கி போராளிகள். இவர்கள், மணிப்பூரில் கலவரத்தை உருவாக்குவதும், கொலைகள், கடத்தல்கள் மற்றும் பலரை மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் இன கலவரத்திலும் இவர்களின் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம், மிஷனரிகளின் நீண்டகால கோரிக்கையான கிறிஸ்தவ நாட்டை உருவாக்குவதே ஆகும்.